

எந்தக் கட்சியின் தேர்தல் அறிக்கையும் அரசியலமைப்புச் சட்டத்தை மீறமுடியாது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா பதிலடி கொடுத்தார்.
குடியுரிமை திருத்த மசோதா மக்களவையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டு 7 மணிநேரத்துக்கும் மேலாக நீண்ட விவாதத்துக்குப் பின் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 311 உறுப்பினர்களும், எதிராக 80 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
இந்நிலையில் மாநிலங்களவையில் குடியுரிமைத் திருத்த மசோதாவை உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிமுகம் செய்து பேசினார். அப்போது, இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் அச்சப்படத் தேவையில்லை. தேர்தல் அறிக்கையில் பாஜக குறிப்பிட்ட வாக்குறுதியாகக் குடியுரிமைத் திருத்த மசோதா இடம் பெற்றுள்ளது. அதற்காக மக்கள் வாக்களித்துள்ளார்கள்" என்று பேசினார்.
இதற்கு பதில் அளித்து காங்கிரஸ் மூத்த எம்.பி. ஆனந்த் சர்மா பேசுகையில், " குடியுரிமைத் திருத்த மசோதா என்பது சர்ச்சைக்குரிய மசோதா. சமூகத்தில் பிரிவினையையும், பாரபட்சத்தையும் உருவாக்கும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சங்களுக்கு எதிரானது.
ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் தேர்தல் அறிக்கை வெளியிடவும், வைத்துக் கொள்ளவும் உரிமை இருக்கிறது. ஆனால் எந்த ஒரு அரசியல் கட்சியின் தேர்தல் அறிக்கையும் தேசத்தின் அரசியலமைப்புச் சட்டத்தை மீறமுடியாது.
அரசியலமைப்புச் சட்டம் பிரிவு6-ல் கூறப்பட்டுள்ளபடி, எந்த நாட்டு மக்களும் இந்தியக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம். இதை வரலாற்றுச் சிறப்பு மிக்க மசோதா என்று உள்துறை அமைச்சர் கூறினார். வரலாற்றில் எவ்வாறு மதிப்பிடப்படும் என்பதை நீங்கள் பிற்காலத்தில் அறிவீர். வெறுப்புணர்வுடன்தான் மத்திய அரசு இந்த மசோதாவைக் கொண்டு வந்துள்ளது.
இந்த மசோதாவை நிறைவேற்ற ஏன் மத்திய அரசு இவ்வளவு அவசரம் காட்டுகிறது. இந்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பி விவாதித்தபின், அடுத்த கூட்டத் தொடரில் நிறைவேற்றலாமே.
நாங்கள் இந்த மசோதாவுக்கு எதிராக இருப்பது அரசியல் காரணங்களால் அல்ல, ஆனால், அரசியலமைப்புச் சட்டம், அறத்தின் அடிப்படையில் எதிர்க்கிறோம். நீங்கள் கொண்டு வந்துள்ள இந்த மசோதா நமது அரசியலமைப்பின் அடிப்படை மதிப்புகள் மீதான தாக்குதலாகவே நம்புகிறேன். குடியரசு இந்தியாவின் முழுமையான ஆன்மாவுக்குக் காயம் ஏற்படுத்தும். அறத்தின் பரிசோதனையின் இந்த மசோதா தோற்றுவிட்டது.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்தும் சுதந்திரம், சமத்துவம், மதச்சார்பின்மை ஆகியவற்றுக்கு எதிராகவே இந்த மசோதா இருக்கிறது. நூற்றாண்டுகளுக்கு முன்பாக இந்தியாவுக்குப் புலம்பெயர்ந்து மக்கள் வந்துள்ளார்கள். சுதந்திரத்துக்குப்பின் இலங்கை, உகாண்டா ஆகிய நாடுகளில் இருந்துகூட வந்த மக்களுக்கு ஆதரவு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒருபோதும் மதம் ஒரு அளவுகோலாக வைக்கப்படவில்லை.
மதத்தை அடிப்படையாக வைப்பதற்கு அரசியல்தான் முக்கியக் காரணம். தற்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்குச் சட்டத்தில் ஏற்கனவே வழிமுறைகள் இருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியும்.
கடந்த 1947-ம் ஆண்டு நாடு பிரிக்கப்பட்டதற்குக் காங்கிரஸ் கட்சிதான் காரணம் என்று மக்களவையில் அமித் ஷா பேசியதை எதிர்க்கிறேன். இந்து மகாசபையின் சவார்க்கர் தான் முதலில் இரு தேசக் கோட்பாட்டைப் பேசி, நாட்டை பிரிக்க முயன்றார். அதன்பின் முஸ்லிம் லீக் கையில் எடுத்தது.
அசாமில் உருவாக்கப்பட்டுள்ள தடுப்பு முகாம்கள் மாநிலம் முழுவதும் எவ்வளவு பெரிய கொந்தளிப்பை உருவாக்கி வருகிறது தெரியுமா. ஒட்டுமொத்த அசாம் முழுவதும் பதற்றமாக இருக்கிறது. மாணவர்கள் மீண்டும் சாலைக்கு வந்து போராட்டம் நடத்துகிறார்கள். இப்போது நாடுமுழுவதும் அசாமில் அமைத்தது போன்று தடுப்பு முகாம்களை அமைக்க மத்திய அரசு நிலம் கையகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
இவ்வாறு ஆனந்த் சர்மா பேசினார்