Last Updated : 11 Dec, 2019 05:24 PM

 

Published : 11 Dec 2019 05:24 PM
Last Updated : 11 Dec 2019 05:24 PM

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு: அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

அலிகர் முஸ்லி பல்கலைகழக மாணவர்களும் நேற்று முதல் குடியுரிமை மசோதாவை எதிர்த்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.

புதுடெல்லி

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு வட கிழக்கு மாநில மாணவர் சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தவகையில் உ.பி.யின் அலிகர் முஸ்லி பல்கலைகழக மாணவர்களும் நேற்று முதல் மசோதாவை எதிர்த்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இதற்காக நேற்று இந்த மத்திய பல்கலைகழகத்தின் வளாகத்தின் உள்ளே அதன் மாணவர்கள் ஊர்வலமும் நடத்தி இருந்தனர். இதில், மசோதா எதிர்ப்பு வாசகங்களுடன் பதாகைகள் ஏந்தி மாணவர்கள் பெருமளவில் திரண்டு வந்தனர்.

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின்(அமுப) முன்னாள் மாணவர் பேரவை தலைவர்களால் தொடங்கப்பட்ட இப்போராட்டத்தில் மாணவர்களுடன் அதன் பேராசிரியர்களும் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இது குறித்து அப்பல்கலைகழகத்தின் முன்னாள் மாணவர் பேரவை தலைவர் சல்மான் இம்தியாஸ் கூறும்போது, அமுப வின் மாணவர்கள் இந்த மசோதாவை ஒருமனதாக நிராகரிக்கின்றனர். இந்து சமாதானம் என்ற பெயரில் இந்தியாவைப் பிளவுபடுத்தும் எந்தவொரு நடவடிக்கையையும் நாங்கள் எதிர்ப்போம்.

இந்த மசோதாவிற்கு மாநிலங்களவையில் அனைத்து அரசியல் கட்சிகளும் நிராகரிக்க வேண்டும் எனக் கூறி வலியுறுத்தி உள்ளோம். சுதந்திரப் போராட்டத்தின் போது நம் நாட்டை ஆளும் இந்துத்துவாவினர் ஆங்கிலேயரின் சார்புடையவர்களாக இருந்தனர், இப்போது ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சியை பயன்படுத்தி நாட்டை பிளவுபடுத்துகின்றனர். எனத் தெரிவித்தார்.

இஸ்ரேலின் யூத இனவாதத்தையே பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷாவும் இந்துத்வா என்ற பெயரில் நடைமுறைப்படுத்துவதாகவும் மாணவர்கள் குற்றம் சாட்டினார். இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையை காப்பாற்ற குடியரசு தலைவர் மற்றும் உச்ச நீதிமன்றத்தையும் நாட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே, மாணவர்கள் சார்பில் ஒரு திறந்த மடல் பல்கலைகழக அலுவலர், பேராசிரியர்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது. அதில், அனைவரும் குடியுரிமை மசோதாவை எதிர்க்கும் தங்கள் தொடர் போராட்டத்தில் வந்து கலந்துகொள்ளும்படியும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை எனில் தாம் ஆசிரியர்களின் வகுப்பை புறக்கணிக்க இருப்பதாகவும் மாணவர்கள் சார்பில் மிரட்டல் விடபட்டுள்ளது. இதனால், நிலவும் பதட்டம் காரணமாக பல்கலைகழகத்தின் வாசலில் மத்திய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.-

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x