Published : 11 Dec 2019 05:28 PM
Last Updated : 11 Dec 2019 05:28 PM

பிஎஸ்எல்வி ராக்கெட்டின் 50-வது வெற்றிகரப் பயணம்- இஸ்ரோ சிவன் பெருமிதம்

பிஎஸ்எல்வி ராக்கெட் தனது 50-வது பயணத்தை வெற்றிகரமாக மேற்கொண்டு, ரிசாட் – 2பிஆர்1 செயற்கைக்கோளை அதன் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து பிஎஸ்எல்வி சி48 மூலம் ரிசாட் –2பிஆர்1 செயற்கைக்கோள் இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், ''இந்த செயற்கைக்கோள், 576 கிலோமீட்டர் தூரத்தில் நிர்ணயிக்கப்பட்ட சுற்றுவட்டப் பாதையில் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 26 ஆண்டுகளாக பிஎஸ்எல்வி ராக்கெட் பணிகளில் ஈடுபட்ட டாக்டர் ஸ்ரீநிவாசன், மாதவன் நாயர் உள்ளிட்ட இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானிகளுக்கும் தற்போது இந்தப் பணியில் ஈடுபட்டு வரும் இளம் விஞ்ஞானிகளுக்கும் எனது பாராட்டுகள்.

பிஎஸ்எல்வி ராக்கெட் தொடக்கத்தில் 1.9 டன் எடையுள்ள செயற்கைக்கோளினை கொண்டு செல்லும் திறன் கொண்டதாக இருந்தது. ஆனால், இது படிப்படியாக அதிகரித்து தற்போது 52.7 டன் எடை கொண்ட செயற்கைக்கோள்களை ஏந்திச்செல்லும் திறனைப் பெற்றுள்ளது. இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றிகரமாக செயல்படுத்திய விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள்.

இந்த ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட செயற்கைக் கோள்களில் 30 சதவீதம் இந்தியாவுக்கானவை. 70 சதவீதம் வெளிநாடுகளுக்கு உரியவை. ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து 75-வது முறையாக செயற்கைக்கோள் செலுத்தப்படுவது மேலும் ஒரு மைல்கல்.

தற்போது அனுப்பப்பட்டுள்ள ரிசாட் - 2பிஆர்1 செயற்கைக்கோள் நவீனமானது. விண்வெளித் துறையில் மேலும் பல பெரும் பணிகளை செய்ய வேண்டியுள்ளது'' என்றார்.

பிஎஸ்எல்வி 50 என்ற தொகுப்பு நூலை வெளியிட்ட சிவன், அதில் ராக்கெட் குறித்தும் அதன் மூலம் செலுத்தப்பட்ட இந்திய செயற்கைக்கோள்கள் மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர் செயற்கைக்கோள்கள் பற்றிய விவரங்களும் உள்ளதாகத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x