Last Updated : 11 Dec, 2019 04:53 PM

 

Published : 11 Dec 2019 04:53 PM
Last Updated : 11 Dec 2019 04:53 PM

தாய், தந்தையைக் கவனிக்காவிட்டால் 6 மாதம் சிறை; ரூ.10 ஆயிரம் அபராதம்: மக்களவையில் மசோதா தாக்கல்

பிரதிநிதித்துவப் படம்.

புதுடெல்லி

வயதான காலத்தில் பெற்ற தாய், தந்தையை அவமதித்து கவனிக்காமல் இருந்தால், மூத்த குடிமக்களை அவமரியாதைக் குறைவாக நடத்தினால் 6 மாதம் சிறைத் தண்டனை அல்லது ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கும் திருத்த மசோதாவை மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.

கடந்த 2007-ம் ஆண்டு நடைமுறையில் இருந்த பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நல மசோதாவில் இந்த திருத்தம் கொண்டுவர மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மக்களவையில் இந்த மசோதாவை மத்திய சமூக நீதித்துறை மற்றம் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் தாக்கல் செய்தார்.

இந்த மசோதாவில் குறிப்பிட்டுள்ளபடி 'பிள்ளைகள்' பெற்றோர்களை, மூத்த குடிமக்களை உடல்ரீதியாகவோ, வார்த்தைகள் மூலமோ, உணர்வு ரீதியாகவோ, பொருளாதார ரீதியாகவோ தவறாக நடத்துதல் குற்றமாகும். அவர்களைப் புறக்கணித்தல், ஆதரவின்றிக் கைவிடுதல், தாக்குதல், மனரீதியாக உளைச்சலை அளித்தல் குற்றமாகும்.

இதில் பிள்ளைகள் என்ற வார்த்தையில் குறிப்பிடப்படுபவர்கள் மகன்,மகள், தத்தெடுக்கப்பட்ட மகன், மகள், மருமகள், மருமகன், பேரன், பேத்திகள், சட்டரீதியாக பாதுகாவலர்கள் ஆகியோரும் அடக்கம்.

மூத்த குடிமக்கள் தங்கள் பிள்ளைகள், உறவுகள் தங்களைக் கவனிப்பதில்லை, பராமரிக்கவில்லை என்று தீர்ப்பாயத்தில் புகார் அளித்தால் தீர்ப்பாயம் புகார்களைப் பெற்று 60 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும். தவிர்க்க முடியாத சூழலில் கூடுதலாக 30 நாட்கள் நீட்டிக்கலாம். இதற்கான தீர்ப்பாயமும் உருவாக்க மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், காவல் நிலையத்தில் மூத்த குடிமக்கள் தங்கள் பராமரிப்பின்மை தொடர்பாகவோ, அவமதிப்பு தொடர்பாகவோ புகார் அளித்தால் அந்தப் புகாரை துணை ஆய்வாளருக்குக் குறையாத அந்தஸ்தில் உள்ள அதிகாரி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் மூத்த குடிமக்களுக்கென தனியாக உதவி செய்யும் பிரிவும், அந்தப் பிரிவுக்கு டிஎஸ்பி அந்தஸ்துக்குக் குறைவில்லாத போலீஸ் அதிகாரி நியமிக்கப்பட வேண்டும் என்று மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x