

கடந்த மார்ச் மாதத்துக்குப்பின் வெங்காயத்தின் விலை 400 மடங்கு உயர்ந்துள்ளது. என்று மத்திய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது
பருவம் தவறிய மழையால் வெங்காய விளைச்சல் பாதிப்பு, நிலங்களில் வெங்காய பயிரிடுதல் குறைவு போன்றவற்றால் சந்தைக்கு வெங்காய வரத்து கடந்த இரு மாதங்களாகக் குறைந்து வந்தது. இதனால் சமையலுக்கு அத்தியாவசியப் பொருளான வெங்காயத்தின் விலை படிப்படியாக உயர்ந்தது.
தீபாவளிப் பண்டிகைக்கு முன்பா கட்டுக்குள் இருந்த வெங்காயத்தின் விலை அதன்பின் கடுமையாக அதிகரிக்கத் தொடங்கியது. இதனால், வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்யவும் மத்திய அரசு முடிவு செய்தது. வெங்காயத்தின் விலை கடந்த சில வாரங்களாகக் கிலோ 100 ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது. சில நகரங்களில் வெங்காயம் கிலோ 200 ரூபாயை எட்டிவிட்டது.
தங்க நகைகள், பணம் கொள்ளையடிக்கப்படுவதுபோல், திருடப்படுவதுபோல் தற்போது வெங்காயக் கொள்ளையும், வெங்காயம் திருடுவதும் ஆங்காங்கே நடந்து வருகிறது. வெங்காய விலை உயர்வால் சாமானிய மக்கள் முதல் நடுத்தர மக்கள் வரை பெரும் சிரமத்துக்குள்ளாகி இருக்கிறார்கள்.
எம்.பிக்கள் ராகுல் ரமேஷ் ஷேவாலே, பாரதிஹரி மஹ்தக் ஆகியோர் கடந்த 10 மாதங்களில் உணவுப் பொருட்கள் விலை உயர்வு குறித்தும், அதைத் தடுக்க மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள், விலைவாசி உயர்வதற்கான காரணம் குறித்து கேள்வி எழுப்பினர்.
மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நுகர்வோர் விவகாரத்துறை மற்றும் பொது வழங்கல் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் பதில் அளித்தார்.
அப்போது அவர் பேசுகையில் " கடந்த 3-ம் தேதி நிலவரப்படி வெங்காயத்தின் விலை சராசரியாகக் கிலோ ரூ.81.90 பைசாவாக இருக்கிறது. ஆனால், இது கடந்த மார்ச் மாதம் ஒரு கிலோ வெங்காயம் சராசரியாகக் கிலோ ரூ.15.87 பைசாவாக மட்டுமே இருந்தது. கடந்த 9 மாதங்களில் வெங்காயத்தின் விலை 400 மடங்கு அதிகரித்துள்ளது.
இதேபோல அரிசி, கோதுமை ஆகியவற்றின் விலையும் 10 சதவீதம் அதிகரித்துள்ளது, பருப்பு வகைகளின் விலை 30 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் காய்கறிகள், குறிப்பாக உருளைக்கிழங்கு, தக்காளி, வெங்காயம், சமையல் எண்ணெய், தேயிலை, சர்க்கரை, பால் உள்ளிட்ட 22 அத்தியாவசியப் பொருட்களின் விலை சீராக விலை உயர்ந்துள்ளது.
உணவுப் பொருட்கள், காய்கறிகள் சந்தைக்கு வரத்துக்கும், மக்களின் தேவைக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி இருப்பதே விலைவாசி உயர்வுக்குக் காரணம். மக்களின் தேவைக்கு ஏற்ப காய்கறிகள், உணவுப் பொருட்கள் சப்ளை சந்தைக்கு வரத்து இல்லை. இதற்குப் பருவம் தவறிய மழை, காலநிலை, போக்குவரத்து செலவு அதிகரிப்பு, சேமிப்பு கிடங்கு பற்றாக்குறை, பதுக்கல் போன்றவை விலை உயர்வுக்குக் காரணம்.
காய்கறிகள், உணவுப் பொருட்களின் விலையைக் கட்டுக்குள் வைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது" எனத் தெரிவித்தார்