

பாகிஸ்தானில் இருந்து அகதிகளாக இந்தியாவுக்கு வரும் முஸ்லிம்களுக்கும் குடியுரிமை அளிக்க வேண்டுமா என மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கேள்வி எழுப்பினார்.
குடியுரிமைத் திருத்த மசோதாவை மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிமுகம் செய்தார். ஏறக்குறைய 9 மணிநேரம் நீண்ட விவாதத்துக்குப்பின் மசோதா நள்ளிரவில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 311 உறுப்பினர்களும், எதிராக 80 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
குடியுரிமை திருத்த மசோதாவில் சில முக்கியத் திருத்தங்களைக் கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கக் குடியுரிமை மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மசோதாவில் மதரீதியாக மக்களைப் பிரித்து குடியுரிமை வழங்க மத்திய அரசு முயல்கிறது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
மக்களவையில் இந்த மசோதா நிறைவேறியுள்ள போதிலும், மாநிலங்களவையில் நிறைவேறுமா என்ற கேள்வியுள்ளது.
245 உறுப்பினர்கள் கொண்ட மாநிலங்களவையில் தற்போது 238 எம்.பிக்கள் உள்ளனர். இதில் ஒரு மசோதாவை நிறைவேற்ற 120 எம்.பி.க்கள் ஆதரவு தேவை.
இதில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கு 102 எம்.பி.க்கள ஆதரவு இருக்கிறது. இதில் பாஜகவுக்கு 81 எம்.பி.க்களும், ஐக்கிய ஜனதா தளம் 6, சிரோன்மணி அகாலிதளம் 3 உறுப்பினர்கள், இந்தியக் குடியரசுக் கட்சிக்கு ஒரு எம்.பி. நியமன எம்.பி.க்கள் என 102 பேர் ஆதரவு இருக்கிறது. இன்னும் 18 எம்.பி.க்கள் ஆதரவு பாஜகவுக்கு தேவை.
இந்தநிலையில் குடியுரிமை மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் குடியுரிமை மசோதா மீதான விவாத்தின்போது அமித் ஷா குறிக்கிட்டு பேசியதாவது:
‘‘பாகிஸ்தான், வங்கதேசச்தில் மதச்சிறுபான்மை மக்கள் அங்கு வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்படுகிறார்கள், அல்லது கொல்லப்படுகிறார்கள். இதற்கு அஞ்சி அங்கிருந்து பலர் தங்கள் குடும்பத்தையும், மதத்தையும் பாதுகாக்கும் நோக்கில் இந்தியாவுக்கு வந்துள்ளார்கள்.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருக்கும் சிறுபான்மை மக்கள் 20 சதவீதத்துக்கும் குறைந்துவிட்டது. இந்த 3 நாடுகளும் சிறுபான்மை மக்களுக்கு உரிய உரிமைகளை வழங்கவில்லை.
மதரீதியாகத் துன்புறுத்தல்களைச் சந்தித்து இந்தியாவில் அடைக்கலம் வந்து பரிதாபமான வாழ்க்கையை வாழும் சிறுபான்மை மக்களுக்குக் குடியுரிமைத் திருத்த மசோதா நிச்சயம் மிகப்பெரிய நிம்மதியை வழங்கும்’’ எனக் கூறினார்.
பின்னர் எதிர்க்கட்சி எம்.பி.க்களை பார்த்து பேசிய அமி்த ஷா ‘‘உங்களுக்கு என்ன வேண்டும்? பாகிஸ்தானில் இருந்து அகதிகளாக இந்தியாவுக்கு வரும் முஸ்லிம்களுக்கும் குடியுரிமை அளிக்க வேண்டுமா? எப்படி இந்த நாடு இயங்கும்’’ எனக் கூறினார்.