Last Updated : 11 Dec, 2019 12:52 PM

 

Published : 11 Dec 2019 12:52 PM
Last Updated : 11 Dec 2019 12:52 PM

நீங்கள் நாட்டுக்கு நிதியமைச்சர் உங்களுக்கு அல்ல: நிர்மலா சீதாராமன் மீது பிரியங்கா காந்தி பாய்ச்சல்

நிர்மலா சீதாராமன் அவருக்கு நிதியமைச்சர் அல்ல, ஒட்டுமொத்த நாட்டுக்கும் நிதியமைச்சர் என்ற நினைப்பில் பேச வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. நாட்டின் பல்வேறு இடங்களில் வெங்காயத்தின் விலை கிலோ ரூ.200க்கு விற்பனையாகிறது. பல்வேறு நாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வந்தபோதிலும், இன்னும் வெங்காயத்தின் விலை குறையவில்லை.

வெங்காயத்தின் விலை சராசரியாக கிலோ 120 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்பனையாகிறது. இதனால், சாமானிய மக்கள் முதல் நடுத்தர மக்கள் என அனைவரும் பெரும் சிரமத்துக்குள்ளாகி இருக்கின்றனர்.

இதற்கிடையே மக்களவையில் கடந்த வாரம் வெங்காயத்தின் விலை உயர்வு குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், "நான் வெங்காயம் மற்றும் வெள்ளைப் பூண்டு சாப்பிடுவதில்லை. அப்படிப்பட்ட குடும்பத்தில் இருந்து வந்தவர், வெங்காயம் அதிகம் சாப்பிடுவதில்லை" எனத் தெரிவித்தார்.

நிர்மலா சீதாராமனின் இந்தக் கருத்து குறித்தும், வெங்காய விலை உயர்வைக் குறைக்க நடவடிக்கை எடுக்காதது குறித்தும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ட்விட்டரில் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அவர் வெளியிட்ட பதிவில், " நிர்மலா சீதாராமன் வெங்காயம், பூண்டு சாப்பிடமாட்டார் என்பது கேட்பதற்கு நன்றாக இருக்கிறது. ஆனால், நீங்கள் உங்களுக்கு மட்டும் நிதியமைச்சர் அல்ல, நாட்டுக்கு நிதியமைச்சர். அதிகரித்து வரும் வெங்காயத்தின் விலையால், சாமானிய மக்கள் நாள்தோறும் கொள்ளையடிக்கப்படுகிறார்கள். விரைவில் இதற்கு நீங்கள் தீர்வு காணுங்கள்.

வெங்காயத்தை விளைவிக்கும் விவசாயிகளுக்குக் கிலோவுக்கு 2 ரூபாய் முதல் 8 ரூபாய் வரைதான் கிடைக்கிறது. ஆனால், இடைத்தரகர்கள்தான் அதிகமாகச் சம்பாதித்து பணக்காரர்களாக மாறுகிறார்கள், விவசாயிகள் கடனால் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

இதுபோன்ற மோசமான கொள்கைகளால், வெங்காயம் விளையும் பகுதி குறைந்துள்ளது. நீங்கள் ஒன்றும் இதில் செய்யவில்லை. இப்போது வெங்காயம் மக்களைக் கண்ணீர்விட வைக்கிறது. விவசாயிகளும் எதையும் பெறவில்லை, சாமானிய மக்களும் அதிக விலை கொடுத்து வெங்காயம் வாங்குகிறார்கள். விவசாயிகள், மக்களுக்கு இடையே இடைத்தரகர்கள் தான் பெருமளவு பயன் அடைகிறார்கள். உங்கள் கொள்கை திவாலாகிவிட்டதையே காட்டுகிறது’’.

இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x