

குடியுரிமை திருத்த மசோதா விவகாரத்தில் எதிர்க்கட்சியினர் பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசுகிறார்கள் என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
குடியுரிமை திருத்த மசோதா மக்களவையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டு 7 மணிநேரத்துக்கும் மேலாக நீண்ட விவாதத்துக்குப் பின் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 311 உறுப்பினர்களும், எதிராக 80 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இந்த மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
மாநிலங்களவையில் இன்று குடியுரிமை திருத்த மசோதா தாக்கலாகும் முன்பாக பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள், எம்.பி.க்கள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் பேசப்பட்டது குறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி நிருபர்களிடம் கூறுகையில், " குடியுரிமை திருத்த மசோதா விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் சில பாகிஸ்தானுக்கு ஆதரவாகக் கருத்துகளைத் தெரிவிக்கின்றன என்று பிரதமர் மோடி தெரிவித்தார். மதரீதியாகத் துன்புறுத்தல்களை அனுபவித்து வரும் மக்களுக்கு இந்த மசோதா வரலாற்றில் பொன் எழுத்துகளால் எழுதப்படும் என்று மோடி பேசினார்.
அதுமட்டுமல்லாமல் அண்டை நாடுகளில் மதரீதியான துன்புறுத்தல்களை அனுபவித்து இந்தியாவுக்கு வந்துள்ள மத சிறுபான்மை மக்களுக்கு நிரந்தரமான மன நிம்மதியை அளிக்கும் என்று மோடி குறிப்பிட்டார்
பாஜக எம்.பி.க்கள் அனைவரும் தங்கள் தொகுதியில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களிடமும், விவசாயிகள் முதல் ஏழை மக்கள் வரை, தொழிலதிபர்கள் வரை அவர்களின் தேவைகளைக் கேட்டறிந்தும் பட்ஜெட் தொடர்பான கருத்துகளைக் கேட்டும் விரைவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் குறிப்புகளை வழங்கிட வேண்டும் எனப் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்" என்று பிரகலாத் ஜோஷி தெரிவித்தார்.
மக்களவையில் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நடந்த விவாதத்தின்போது காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.