

கேரளாவில் காணாமல் போனதாகச் சொல்லப்பட்ட பெண்ணின் கொலையில் அவரது கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். 'த்ரிஷ்யம்' திரைப்படத்தைப் பார்த்து போலீஸை திசை திருப்ப முயற்சித்ததாக பிரேம்குமார் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை அன்று, ஒரு ஹோட்டலில் மேனேஜராகப் பணிபுரியும் பிரேம்குமார் எனபவரையும், சுனிதா என்கிற செவிலியரையும், பிரேம்குமாரின் மனைவி வித்யாவைக் கொலை செய்ததற்காகப் போலீஸார் கைது செய்தனர். வித்யா காணவில்லை என செப்டம்பர் 23 அன்று கொச்சியில் பிரேம்குமார் காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.
பிரேம்குமாரும் சுனிதாவும் பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள். மூன்று வருடங்களுக்கு முன்பு அவர்கள் வகுப்பில் படித்தவர்கள் அனைவரும் மீண்டும் சந்தித்த போது இவர்களுக்குள் காதல் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பிரேம்குமாருடன் இருப்பதற்காக தனது கணவர், குழந்தைகளை விட்டுவிட்டு மூன்று வருடங்களாக பிரேம்குமாருடன் ஒரு ஃபிளாட்டில் சுனிதா இருந்து வந்துள்ளார். ஆனால் சுனிதாவுடன் தொடர்ந்து இருப்பதற்குத் தடையாக இருக்கும் தனது மனைவி வித்யாவைக் கொலை செய்ய பிரேம்குமார் முடிவெடுத்துள்ளார்.
செப்டம்பர் 20 அன்று, ஒரு பார்ட்டி என்று சொல்லி வித்யாவை திருவனந்தபுரத்தில் ஒரு வீட்டிற்கு வரவழைத்து அங்கு அவரை மது அருந்தச் செய்து, பின் கழுத்தை நெரித்து இருவரும் கொலை செய்துள்ளனர். பின் உடலை காரின் டிக்கியில் மறைத்து வைத்து தமிழக எல்லைக்குள் வந்து, திருநெல்வேலியின் மனூர் பகுதியில் அதை அப்புறப்படுத்தியுள்ளனர்.
'த்ரிஷ்யம்' படத்தில் வருவதைப் பார்த்து, போலீஸ் விசாரணையை திசை திருப்ப பிரேம்குமார் முயன்றார். வித்யாவே ஓடிவிட்டார் என்று காட்டுவதற்காக வித்யாவின் மொபைலை, நீண்ட தூரம் செல்லும் ஒரு ரயில் வண்டியில் போட்டிருக்கிறார். இது 'த்ரிஷ்யம்' படத்தில் மோகன்லால் கதாபாத்திரம் செய்யும் செயலே.
ஆனால் வித்யாவின் மொபைல் சிக்னலை போலீஸ் ஆராய்ந்தபோது, வித்யா காணாமல் போவதற்கு முன்னால் அவரது சிக்னலும், பிரேம்குமார் மொபைலின் சிக்னலும் ஒரே இடத்தில் இருந்தது தெரியவந்துள்ளது. காவல்துறை தன்னை நெருங்குவதை உணர்ந்த பிரேம்குமார், முன் ஜாமீனுக்கு முயன்றார்.
தொடர்ந்து சுனிதாவுடன் அவருக்குப் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. இந்த சூழலுக்கு பிரேம் தான் காரணம் என சுனிதா சண்டையிட்டிருக்கிறார். அழுத்தத்தில் இருந்த பிரேம்குமார், தான் குற்றத்தை ஒப்புக்கொள்ளத் தயாராக இருப்பதாக வாட்ஸ் அப்பில் விசாரணை அதிகாரி ஒருவருக்குத் தகவல் அளித்துள்ளார்.
பிரேம்குமார் தனது 13 வயது மகனை ஒரு அனாதை இல்லத்தில் சேர்த்துள்ளார். மகனைக் கடைசியாக ஒரு முறை பார்க்க பிரேம்குமார் அங்கு வந்தபோது போலீஸார் அவரைக் கைது செய்துள்ளனர். சுனிதாவையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.