குடியுரிமை மசோதா: மக்களவையில் ஆதரித்த  சிவசேனா மாநிலங்களவையில் எதிர்க்க முடிவு

குடியுரிமை மசோதா: மக்களவையில் ஆதரித்த  சிவசேனா மாநிலங்களவையில் எதிர்க்க முடிவு
Updated on
2 min read

குடியுரிமைத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மக்களவையில் வாக்களித்த நிலையில் மாநிலங்களவையில் ஆதரவளிக்கப்போவதில்லை என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே திடீரென அறிவித்துள்ளார்.

குடியுரிமைத் திருத்த மசோதாவை மக்களவையில் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிமுகம் செய்தார். ஏறக்குறைய 9 மணிநேரம் நீண்ட விவாதத்துக்குப்பின் மசோதா நள்ளிரவில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 311 உறுப்பினர்களும், எதிராக 80 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

குடியுரிமை திருத்த மசோதாவில் சில முக்கியத் திருத்தங்களைக் கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கக் குடியுரிமை மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மசோதாவில் மதரீதியாக மக்களைப் பிரித்து குடியுரிமை வழங்க மத்திய அரசு முயல்கிறது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

மக்களவையில் இந்த மசோதா நிறைவேறியுள்ள போதிலும், மாநிலங்களவையில் நிறைவேறுமா என்ற கேள்வியுள்ளது.
245 உறுப்பினர்கள் கொண்ட மாநிலங்களவையில் தற்போது 238 எம்.பிக்கள் உள்ளனர். இதில் ஒரு மசோதாவை நிறைவேற்ற 120 எம்.பி.க்கள் ஆதரவு தேவை.

இதில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கு 102 எம்.பி.க்கள ஆதரவு இருக்கிறது. இதில் பாஜகவுக்கு 81 எம்.பி.க்களும், ஐக்கிய ஜனதா தளம் 6, சிரோன்மணி அகாலிதளம் 3 உறுப்பினர்கள், இந்தியக் குடியரசுக் கட்சிக்கு ஒரு எம்.பி. நியமன எம்.பி.க்கள் என 102 பேர் ஆதரவு இருக்கிறது. இன்னும் 18 எம்.பி.க்கள் ஆதரவு பாஜகவுக்கு தேவை.

மக்களவையில் இந்த மசோதா மீது வாக்கெடுப்பு நடைபெற்றபோது, திடீர் திருப்பமாக சிவசேனா இந்த மசோதாவுக்கு ஆதரவளித்தது. மகராஷ்டிராவில் பாஜகவுக்கு எதிராக செயல்பட்டு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வரும் சிவசேனா இந்த மசோதாவுக்கு ஆதரவளித்ததால் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தர்மசங்கடமான சூழல் ஏற்பட்டது.

இந்தநிலையில் மாநிலங்களவையில் மசோதாவுக்கு ஆதரவு அளிக்க சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நிபந்தனை விதித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
‘‘இந்த மசோதாவில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என நாங்கள் மக்களவையில் வலியுறுத்தினோம். ஆனால் அதனை மத்திய அரசு செய்யவில்லை. இந்த மாற்றங்களை செய்தால் மட்டுமே மாநிலங்களவையில் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு ஆதரவளிப்போம். அதனால் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களிப்போம் என எதிர்பார்க்க முடியாது’’ எனக் கூறினார்.

பாஜக கொண்டு வந்த மசோதாவுக்கு ஆதரவளித்ததால் காங்கிரஸ் தலைவர்கள் சிவசேனா மீது கடும் அதிருப்தி அடைந்திருப்பதாகவும், அதனால் இந்த முடிவை உத்தவ் தாக்கரே எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in