

ஹைதராபாத் பெண் டாக்டரை ஒரு கும்பல் கடந்த வாரம் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்றது. இவ்வழக்கில் பிடிபட்ட 4 பேரும் கடந்த 6-ம் தேதி போலீஸாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர். இதற்கு மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த சீனியர் எஸ்பி மஞ்சித் சைனில் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மகளிர் அமைப்பினர், இது பொய்யான என்கவுன்ட்டர் என்றும் இது குறித்து நீதி விசாரணை செய்ய வேண்டுமெனவும் ஹைதராபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினர். இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதன் மீது வரும் வியாழக்கிழமை உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்த உள்ளது.
இந்த வழக்கு ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மகபூப் நகர் அரசு மருத்துவமனையில் பத்திரப்படுத்தப்பட்டுள்ள 4 சடலங்களை காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அங்கு வரும் 13-ம் தேதி வரை பத்திரப்படுத்த வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே, மகபூப்நகர் அரசு மருத்துவமனையில் 4 பேரின் சடலங்களுக்கும் பிரேதப் பரிசோதனை நடந்து முடிந்தது. இதில், முதல் குற்றவாளியான முகமது ஆரிஃப் உடலில் 4 தோட்டாக்கள் பாய்ந்தது தெரியவந்துள்ளது. அடுத்ததாக, சென்ன கேசவுலு, சிவா மற்றும் நவீன் ஆகிய மூவரின் உடலிலும் தலா 2 தோட்டாக்கள் பாய்ந்துள்ளன. என்கவுன்ட்டரின்போது, 12 தோட்டாக்கள் வரை பயன்படுத்தியதாக சைபராபாத் போலீஸ் ஆணையர் சஜ்ஜனார் கூறினார். ஆனால், குற்றவாளிகள் போலீஸாரிடமிருந்து துப்பாக்கிகளை பறித்துக் கொண்டு தப்பி ஓடும் போது, போலீஸாரை நோக்கி சுட்ட தோட்டாக்களை தேடும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கண்காணிப்பு கேமராவில் சிக்கிய லாரி
பெண் டாக்டரின் ஸ்கூட்டர் டயரை பஞ்சராக்கிய 4 பேர், அதனை ரிப்பேர் செய்து கொடுப்பதாக கூறி ஏமாற்றி லாரியில் கடத்திச் சென்றுள்ளனர். அப்போது நால்வரும் பிரியங்காவை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.பின்னர் சட்டான்பல்லி மேம்பாலத்தின் கீழே பிரியங்காவை அழைத்து வந்துள்ளனர்.
அவரது வாயை துப்பட்டாவால் கட்டிவிட்டு, மரக்கட்டைகளை போட்டு அவருக்கு தீவைத்து விட்டு, அவரது செல்போனை மறைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதில் பிரியங்காவை லாரியில் கடத்திச் செல்லும் காட்சி அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா ஒன்றில் பதிவாகியுள்ளது. இது புதிய ஆதாரமாக உள்ளது என தெலங்கானா போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.