

குடியுரிமை திருத்த மசோதா முஸ்லிம்களை நாடற்றதாக்க வேண்டும் என்ற நோக்கிலேயே கொண்டு வரப்படுகிறது. மற்றொரு பிரிவினைக்குக் கொண்டு செல்லும் என்று ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான அசாசுதீன் ஒவைசி கடும் கண்டனம் தெரிவித்தார்.
குடியுரிமை திருத்த மசோதாவை மக்களவையில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிமுகம் செய்தார். இந்த மசோதாவில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர்.
இந்த மசோதா மீதான விவாதத்தில் காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தன. ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான அசாசுதீன் ஒவைசி குடியுரிமை திருத்த மசோதாவுக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில், " குடியுரிமை திருத்த மசோதா முஸ்லிம் மக்களை நாடற்றதாக்கிவிடும். இந்த மசோதா மற்றொரு பிரிவினைக்குக் கொண்டு செல்லும். தென் ஆப்பிரிக்காவில் தன்னை வேறுபாட்டுடன் நடத்தினார்கள் என்பதற்காக குடியுரிமையைக் கிழித்துப் போட்டார் மகாத்மா காந்தி. அதேபோல நானும் இந்த மசோதாவைக் கிழித்து எறிகிறேன். ( கிழித்து எறிந்தார். இதற்கு அவைத் தலைவர் ஓம் பிர்லா கண்டனம் தெரிவித்து அவையை அவமானப்படுத்தும் செயல் என்றார்).
இந்த மசோதா சுதந்திரம் பெற்றுக்கொடுத்த தலைவர்களுக்கே அவமானமாகும். முஸ்லிம் மக்களை பாஜக அரசு இறுதி நிலைக்குக் கொண்டு செல்கிறது. ஜெர்மனியில் ஹிட்லர் கொண்டு வந்த பிரிவினை சட்டங்களைக் காட்டிலும் இந்த மசோதா மோசமானது. இந்த மசோதா அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. சீனாவில் இருந்து அகதிகளாக வருபவர்களை இதில் ஏன் சேர்க்கவில்லை. சீனாவைக் கண்டு அரசு பயப்படுகிறதா? " என ஒவைசி கேள்வி எழுப்பினார்.