ஹைதராபாத் என்கவுன்ட்டரில் என்ன தவறு? தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவுக்கு ஜெகன்மோகன் புகழாரம்

ஆந்திர முதல்வர் ஒய்எஸ்ஆர் ஜெகன்மோகன் ரெட்டி, தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் : கோப்புப்படம்
ஆந்திர முதல்வர் ஒய்எஸ்ஆர் ஜெகன்மோகன் ரெட்டி, தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் : கோப்புப்படம்
Updated on
2 min read

ஹைதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவரைப் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைதான 4 பேரை போலீஸார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை செய்தமைக்கு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவுக்கும், போலீஸாருக்கும் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பாராட்டு தெரிவித்துள்ளார்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஷம்சாபாத் சுங்கச் சாவடி அருகே 27 வயது கால்நடை பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார். கடந்த 27-ம் தேதி நடந்த இச்சம்பவம் தொடர்பாக, கைதான 4 பேரும் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த விவகாரம் குறித்து ஆந்திர சட்டப்பேரவையில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று உணர்வுபூர்வமாகப் பேசுகையில், " பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதத்தில் கடுமையான சட்டங்கள் ஆந்திராவில் கொண்டு வரப்படும். அது அவசியமான ஒன்றாகும். அதேபோல பெண்களுக்கு எதிராக பாலியல் குற்ற வழக்குகளை விரைந்து விசாரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஹைதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் இரு பெண் குழந்தைகளுக்குத் தந்தையாகிய எனக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. ஒரு தந்தையாக எவ்வாறு அதுபோன்ற சம்பவத்துக்கு எதிர்வினையாற்றுவது? என் மனவேதனையைத் தீர்க்க என்னவிதமான தண்டனையை அவர்களுக்கு வழங்க முடியும்? அது குறித்து அனைவரும் சிந்திக்க வேண்டும்.

அதனால்தான் அந்த என்கவுன்ட்டர் நடந்தது. ஆனால், தவறு நடந்துவிட்டது போன்ற தோற்றத்தை ஊடகங்கள் காண்பிக்கின்றன. இதில் என்ன தவறு இருக்கு இந்த என்கவுன்ட்டர் செய்த தெலங்கானா போலீஸாருக்கும், முதல்வர் சந்திரசேகர் ராவுக்கும் எனது பாராட்டுகள்.

அதேசமயம், மனித உரிமை மீறலில் ஈடுபட்ட போலீஸார் யார் என்பதையும் முதல்வர் கண்டுபிடிக்க வேண்டும். ஒரு திரைப்படத்தில் ஹீரோ யாரையாவது கொலை செய்தால், நாம் கை தட்டிப் பாராட்டி, நல்ல விஷயம் என்று பாராட்டுகிறோம்.

நிஜ வாழ்க்கையில் துணிச்சலான ஒருவர் இதைச் செய்தால், டெல்லி தேசிய மனித உரிமை ஆணையத்தில் இருந்து ஒருவர் வந்து நீங்கள் செய்தது தவறு என்று கூறுவார். இதுபோன்று நடக்கக்கூடாது. ஏன் என்கவுன்ட்டர் செய்தார், எதற்காகச் செய்தார் என்று கேட்க வேண்டும். நம்முடைய சட்டங்கள் மோசமான நிலையில் இருக்கின்றன.

புதுடெல்லியில் நிர்பயா கொல்லப்பட்ட பின் தான் கடுமையான சட்டம் கொண்டு வந்தோம். 7 ஆண்டுகள் ஆகியும் இன்னும் குற்றவாளிகளுக்குத் தண்டனை நிறைவேற்றப்படவில்லை.

சில நாடுகளில் இதுபோன்ற குற்றம் செய்தவர்களுக்கு உடனடியாக தண்டனை வழங்கப்பட்டுச் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். பெண்களுக்கு எதிராக இதுபோன்ற குற்றங்கள் செய்வோரை அடக்கக் கடுமையான சட்டங்கள் கொண்டுவர வேண்டும்" எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in