

குடியுரிமை திருத்த மசோதா அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. அடைக்கலம் தேடி வரும் அகதிகளை மதரீதியாகப் பிரிக்கிறது என்று காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தது.
குடியுரிமைத் திருத்த மசோதாவை மக்களவையில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிமுகம் செய்தார். இந்த மசோதாவில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர்.
இந்த மசோதா மீதான விவாதத்தில் காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தன.
காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மணிஷ் திவாரி விவாதத்தில் பேசியதாவது:
"அரசியல் நோக்குடன் குடியுரிமைத் திருத்த மசோதாவைக் கொண்டு வந்துள்ளது அனைவருக்கும் தெரியும். இந்த மசோதா அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 14, 15, 21, 25 மற்றும் 26 ஆகியவற்றுக்கு எதிரானது. அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சமத்துவ உரிமை, சட்டத்தின் மூலம் சாதி, வண்ணம், மதம் வேறுபாடின்றி அனைவருக்கும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு எதிராக இந்த மசோதா இருக்கிறது.
ஒட்டுமொத்தமாக அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமாகவும், அரசியலமைப்பின் தாத்பரியத்துக்கு எதிராகவும், பாபா சாஹேப் அம்பேத்கரின் சித்தாந்தங்களுக்கு எதிராகவும் இந்த மசோதா இருக்கிறது.
மக்களை மதரீதியாகப் பிரிக்கிறது. ஆனால், மதச்சார்பின்மை என்று அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள வார்த்தைக்கு விரோதமாக இருக்கிறது. ஐ.நா. தீர்மானத்தின்படி, அகதிகளிடம் மதரீதியாகப் பாகுபாடு காட்டுதல் கூடாது.
நாட்டில் பிளவுபடுத்தும் போக்கிற்கு காங்கிரஸ் கட்சிதான் பொறுப்பு எனும் குற்றச்சாட்டை மறுக்கிறேன். கடந்த 1935-ம் ஆண்டு இந்து மகாசபா கூட்டத்திலேயே வீர சாவர்க்கார் பிரிவினை குறித்த திட்டத்தை முன்வைத்தார்".
இவ்வாறு திவாரி பேசினார்.
திமுக எம்.பி. தயாநிதி மாறன் பேசுகையில், " சிறுபான்மையினரின் ஆதரவை, அன்பைப் பெற இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த மசோதா உலகம் ஒரு குடும்பம் என்ற வாசுதேவ குடும்ப தத்துவத்துக்கு விரோதமானது. பாகிஸ்தானின் சிந்தனைகளை இந்த அரசு கொண்டிருக்கிறது. உள்துறை அமைச்சர் அமித் ஷா வடகிழக்கு மாநிலத்துக்கு மட்டும் அமைச்சர் அல்ல, இந்தியா முழுமைக்கும் அமைச்சர் என்பதை நினைவுபடுத்துகிறோம்" எனத் தெரிவித்தார்.
திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி பேசுகையில், "எங்கள் கட்சியின் கொள்கை இந்தியா முழுமையானது என்ற அடிப்படையைக் கொண்டது. ஆனால் ஆளும் கட்சியின் சிந்தனை என்பது தேசத்தைப் பிரிக்கும் சிந்தனை கொண்டது.
நம்முடைய இந்தியா புன்னகைக்கிறது. உங்கள் இந்தியாவின் சிந்தனை, கும்பல் வன்முறையை அடிப்படையாகக் கொண்டது. மேற்கு வங்கத்தில் என்ஆர்சி இருக்காது என்பதை உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறேன்" எனத் தெரிவித்தார்.