

'பானிபட்’ பாலிவுட் திரைப்படத்துக்கு ராஜஸ்தான் மாநிலத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தத் திரைப்படம் ஜாட் சமூகத்தை அவமதித்து விட்டதாக பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மூன்றாம் பானிபட் போரை வைத்து எடுக்கப்பட்ட பாலிவுட் திரைப்படம் ‘பானிபட்.’ இந்த திரைப்படத்தில் நடிகர் அர்ஜுன் கபூர். சஞ்சய் தத், கீர்த்தி சனோன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 'லகான்', 'ஜோதா அக்பர்' உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய அசுதோஷ் கௌரிகர் இந்தத் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் தற்போது சர்ச்சைக்குள்ளானது.
கடந்த 1961-ம் ஆண்டு டெல்லியில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பானிபட்டில் நடந்த போரை மையமாகக் கொண்டு ‘பானிபட்’ திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. பானிபட்டில் இதுவரை 3 போர்கள் நடந்துள்ளன. முதல் பானிபட் போரில் பாபரும், 2-வது பானிபட் போரில் அக்பரும் வெற்றி பெற்றனர்.
மூன்றாவது போர் மராட்டியர்களுக்கும் ஆப்கானிஸ்தான் மன்னர் அகமது ஷா அப்தாலிக்கும் இடையில் நடந்தது. அகமது ஷாவை ரோகில்லாக்கள், அவந்த் பகுதி நவாப் உள்ளிட்டோர் ஆதரித்தனர்.
ஆப்கானியர்களுக்கு எதிரான இப்போரில் மராட்டிய மன்னர்களுக்கு ராஜபுத்திரப் படைகளும், சீக்கியப் படைகளும் மராட்டியப் படைகளுக்கு உதவ முன் வரவில்லை எனக் கூறப்படுகிறது. அப்போதைய பரத்பூர் மன்னர் மகாராஜா சுரஜ்மால் மராத்தியப் படையுடன் சென்று சரியான நேரத்தில் உதவாமல் பின் வாங்கிச் சென்றதாக 'பானிபட்' திரைப்படத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
(ஜெய்ப்பூரில் தாக்குதலுக்குள்ளன தியேட்டர்)
இதற்கு ராஜஸ்தான் மாநிலத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தத் திரைப்படம் ஜாட் சமூகத்தை அவமதித்துவிட்டதாக பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ராஜஸ்தான் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலோட், பாஜக மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான வசுந்தரா ராஜே உள்ளிட்டோரும் திரைப்படத்திற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ராஜஸ்தான் மட்டுமின்றி ஜாட் சமூக மக்கள் வசிக்கும் பல மாநிலங்களிலும் இந்தத் திரைப்படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ராஜஸ்தானில் ஜெய்ப்பூர் உட்பட பல நகரங்களிலும் தியேட்டர்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.