Last Updated : 09 Dec, 2019 12:45 PM

 

Published : 09 Dec 2019 12:45 PM
Last Updated : 09 Dec 2019 12:45 PM

குடியுரிமை திருத்த மசோதா தாக்கலுக்கு எதிராக மக்களவையில் காங். எம்.பி.சசிதரூர் நோட்டீஸ் தாக்கல்

குடியுரிமை திருத்த மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்படுவதற்கு எதிராகக் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் சபாநாயகரிடம் நோட்டீஸ் அளித்துள்ளார்.

மத்திய அரசு தாக்கல் செய்யும் குடியுரிமை திருத்த மசோதா, அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளான அனைவரும் சமம் என்பதை மீறும்வகையில் இருக்கிறது என்று அந்த நோட்டீஸில் தெரிவித்துள்ளார். மக்களவை அலுவல் விதி 72ன் கீழ் இந்த நோட்டீஸை சசி தரூர் அளித்துள்ளார்

குடியுரிமை திருத்த மசோதாவில் சில முக்கியத் திருத்தங்களைக் கொண்டுவந்துள்ளது மத்திய அரசு.
அதன்படி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கக் குடியுரிமை மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மசோதாவில் மதரீதியாக மக்களைப் பிரித்து குடியுரிமை வழங்க மத்திய அரசு முயல்கிறது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன

இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் குடியுரிமைத் திருத்த மசோதாவுக்கு எதிராக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் நோட்டீஸ் அளித்துள்ளார்.

அந்த நோட்டீஸில் சசி தரூர் கூறியிருப்பதாவது, " அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 14 வழங்கியுள்ள சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படை விதிமுறையை மீறும் வகையில் குடியுரிமைத் திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த நாட்டுக் குடிமக்கள் மட்டுமின்றி, குடியுரிமை பெறாதவர்களுக்கும் சட்டம் சமமான பாதுகாப்பு அளிக்கிறது.

ஆனால், இந்த குடியுரிமைத் திருத்த மசோதா மதத்தின் அடிப்படையில் பிரிவினை காட்டி குடியுரிமை வழங்குகிறது. குறிப்பிட்ட 6 மதங்களைச் சேர்ந்தவர்கள் மட்டும் குடியுரிமை பெறலாம் மற்ற மதத்தைச் சேர்ந்தவர்கள் குடியுரிமை பெற முடியாத வகையில் இருக்கிறது.

அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 13 கூறியுள்ளபடி, எந்த விதமான சட்டங்களும் அடிப்படை உரிமையை மீறும் வகையில் இயற்றக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதலால், இந்த மசோதாவுக்கு எதிர்ப்புத்தெரிவிக்க நான் விரும்புகிறேன், அதுகுறித்து பேச வேண்டும். அவையில் விவாதம் நடத்தப்படும்போது, அதில் பங்கேற்றுப் பேச அனுமதிக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x