குடியுரிமை திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்: சிறுபான்மை மக்களுக்கு எதிரானது அல்ல என அமித்ஷா விளக்கம்

குடியுரிமை திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்: சிறுபான்மை மக்களுக்கு எதிரானது அல்ல என அமித்ஷா விளக்கம்
Updated on
1 min read

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே குடியுரிமை திருத்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

பாஜக தலைமையில் கடந்த முறை ஆட்சியில் இருந்தபோது குடியுரிமை திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது. மாநிலங்களவையில் பாஜகவுக்குப் பெரும்பான்மை இல்லாததால் இந்த மசோதா நிறைவேறாமல் கிடப்பில் போடப்பட்டது.

இதைத்தொடர்ந்து குடியுரிமை திருத்த மசோதாவை மீண்டும் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏற்கெனவே அறிமுகமான மசோதாவில் வில் சில முக்கியத் திருத்தங்களைக் கொண்டுவந்துள்ளது.

அதன்படி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கக் குடியுரிமை மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்களாக கருதப்படுவர். ஆனால் இந்த மசோதாவில் மதரீதியாக மக்களைப் பிரித்து குடியுரிமை வழங்க மத்திய அரசு முயல்கிறது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

இந்தநிலையில் மக்களவையில் இன்று குடியுரிமை திருத்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று அறிமுகம் செய்தார். அப்போது பேசிய அமித் ஷா ‘‘இந்த மசோதா சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிரானது அல்ல’’ எனக் கூறினார்.

ஆனால் இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் மக்களவைக் கட்சித் தலைவர் ஆதிரஞ்சன் சவுத்திரி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in