நிர்பயா வழக்கு குற்றவாளிகளைத் தூக்கிலிட 'ஹேங்மேன்' இல்லை: டெல்லி திஹார் சிறை அதிகாரி தகவல்

நிர்பயா வழக்கு குற்றவாளிகளைத் தூக்கிலிட 'ஹேங்மேன்' இல்லை: டெல்லி திஹார் சிறை அதிகாரி தகவல்
Updated on
1 min read

நிர்பயா வழக்கு குற்றவாளிகளைத் தூக்கிலிட ஹேங்மேன் இல்லாததால் வேறு மாநிலங்களில் ஆள் தேடி வருவதாக டெல்லி திஹார் சிறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2012-ம் ஆண்டும் டிசம்பர் மாதம் மருத்துவ மாணவி நிர்பயா 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். மிக மோசமாக தாக்கப்பட்ட அப்பெண்ணுக்கு டெல்லியிலும் பின்னர் அரசு செலவிலேயே சிங்கப்பூரில் உள்ள மவுன்ட் எலிசபத் மருத்துவமனையிலும் சிகிச்சை நடந்தது. ஆனாலும், உள் உறுப்புகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்ததால் நிர்பயா சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இந்தச் சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நிர்பயாவுக்கு நீதி கேட்டு டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகை முன்னர் நடந்த போராட்டம் வரலாறு காணாததாக இருந்தது.

நிர்பயா மரணத்துக்குப் பின்னர் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் சட்டம் திருத்தி அமைக்கப்பட்டது. குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வழிவகை செய்யப்பட்டது.

இந்த வழக்கில் ராம்சிங், மகேஷ்சிங், வினய் சர்மா, பவன்குப்தா, அக்தர் தாக்கூர் ஆகியோரையும், 16 வயது சிறுவன் ஒருவனையும் போலீசார் கைது செய்தனர். ராம்சிங் திஹார் சிறையிலேயே தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில், டெல்லி திஹார் சிறையில் அடைபட்டிருக்கும் நிர்பயா வழக்குக் குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிட ஆரம்பக்கட்டப் பணிகள் நடைபெற்றுவருவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்குப் பேசிய டெல்லி திஹார் சிறை அதிகாரி ஒருவர், "இங்கு தூக்கிலிடும் பணியைச் செய்யும் ஹேங்மேன் இல்லை. அதனால் தேவை ஏற்படும்போது வெளிமாநிலங்களில் இருந்து ஹேங்மேனைப் பெறுவோம்" என்றார்.

நால்வரில் வினய் சர்மா (23) என்ற குற்றவாளி குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினார். ஆனால் டெல்லி அரசாங்கம் அந்தக் கருணை மனுவை நிராகரிக்குமாறு மிகவும் பலமாக பரிந்துரைத்தது.

மேலும், டெல்லி உள்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின், "இது மிகக் கொடிய குற்றம். வினய் சர்மா இந்தக் குற்றத்தில் மோசமான பங்காற்றியிருக்கிறார். இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்கப்பட்டால்தான் மற்றவர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்கப்படும்" எனக் கூறியிருந்தார்.

எனவே, எந்நேரமும் இந்த கருணை மனு நிராகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் நிர்பயா வழக்கு குற்றவாளிகளைத் தூக்கிலிட திஹார் சிறை ஆயத்தமாகி வருகிறது.

அனுமதி கோரும் ராமநாதபுரம் ஏட்டு..

இதற்கிடையில் நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலடும் பணியைச் செய்ய நான் தயார் என ராமநாதபுரம் போலீஸ் ஏட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திகார் சிறையின் தலைமை இயக்குநருக்கு அவர் கடிதமும் அனுப்பி உள்ளார்.
சுபாஷ் சீனிவாசன் (வயது 42) என்ற அவர் ராமநாதபுரம் மாவட்ட காவல் பணியிடை பயிற்சி மையத்தில் தலைமை காவலராக பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in