

மத்திய பாஜக அரசு கொண்டு வரும் குடியுரிமை திருத்த மசோதவுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அந்த மசோதாவை ஆதரிக்க சிவசேனா முடிவு செய்துள்ளது. இந்த திடீர் திருப்பத்தால் மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சிமைத்துள்ள காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தர்மசங்கடமான சூழல் ஏற்பட்டுள்ளது.
பாஜக தலைமையில் கடந்த முறை ஆட்சியில் இருந்தபோது குடியுரிமை திருத்த மசோதா மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
ஆனால், மாநிலங்களவையில் இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதாலும், எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்ததாலும் இதை நிறைவேற்ற முடியவில்லை.
மேலும், மாநிலங்களவையில் பாஜகவுக்குப் பெரும்பான்மை இல்லாததால் இந்த மசோதா நிறைவேறாமல் கிடப்பில் போடப்பட்டது. மக்களவை காலம் காலாவதியானது மசோதாவும் காலாவதியானது.
இந்நிலையில் குடியுரிமை திருத்த மசோதாவில் சில முக்கியத் திருத்தங்களைக் கொண்டுவந்துள்ளது மத்திய அரசு.
அதன்படி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கக் குடியுரிமை மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மசோதாவில் மதரீதியாக மக்களைப் பிரித்து குடியுரிமை வழங்க மத்திய அரசு முயல்கிறது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
மக்களவையில் இன்று குடியுரிமை திருத்த மசோதாவை அறிமுகம் செய்யும் உள்துறை அமைச்சர் அமித் ஷா பிற்பகலில் மாநிலங்களவையிலும் இந்த மசோதாவை அறிமுகம் செய்வார் எனத் தெரிகிறது.
மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மக்களவையில் பெரும்பான்மை இருப்பதால், குடியுரிமை திருத்த மசோதா எளிதாக நிறைவேறிவிடும்.
ஆனால், மாநிலங்களவையில் நிறைவேறுமா அல்லது கடந்த முறை போன்று நிறைவேற்ற முடியாத சூழல் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
245 உறுப்பினர்கள் கொண்ட மாநிலங்களவையில் தற்போது 238 எம்.பிக்கள் உள்ளனர். இதில் ஒரு மசோதாவை நிறைவேற்ற 120 எம்.பி.க்கள் ஆதரவு தேவை.
இதில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கு 102 எம்.பி.க்கள ஆதரவு இருக்கிறது. இதில் பாஜகவுக்கு 81 எம்.பி.க்களும், ஐக்கிய ஜனதா தளம் 6, சிரோன்மணி அகாலிதளம் 3 உறுப்பினர்கள், இந்தியக் குடியரசுக் கட்சிக்கு ஒரு எம்.பி. நியமன எம்.பி.க்கள் என 102 பேர் ஆதரவு இருக்கிறது.
இன்னும் 18 எம்.பி.க்கள் ஆதரவு பாஜகவுக்கு தேவை. இந்த 18 எம்.பி.க்கள் ஆதரவைப் பெறுவதற்காக அதிமுக(11 எம்.பி.க்கள்), பிஜு ஜனதா தளம்(7 எம்.பிக்கள்) டிஆர்எஸ்(6 எம்.பி.க்கள்), ஒய்எஸ்ஆர் சிபி(2 எம்.பி.க்கள்) ஆகிய கட்சிகளுடன் பாஜக பேசி வருவதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில் திடீர் திருப்பமாக சிவசேனா இந்த மசோதாவுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளது. இதனை பாஜக மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் ‘‘சட்டவிரோத குடியேறிகள் வெளியேற்றப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. புலம் பெயர்ந்து வந்த இந்துக்களுக்கு குடியுரிமை அளிக்க வேண்டும்.
அதனால் இந்த குடியுரிமை மசோதாவை ஆதரிப்போம். அதேசமயம் அவர்களை வெறும் வாக்கு வங்கி அரசியலுக்காக பயன்படுத்தக்கூடாது. காஷ்மீருக்கு சிறப்பு சலுகை வழங்கிய 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகும் கூட காஷ்மீர் பண்டிட்டுகள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியவில்லையே’’ எனக் கூறியுள்ளார்.
மகராஷ்டிராவில் பாஜகவுக்கு எதிராக செயல்பட்டு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வரும் சிவசேனா இந்த மசோதாவுக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளது. இதனால் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தர்மசங்கடமான சூழல் ஏற்பட்டுள்ளது.