

பலாத்கார வழக்குகள், போக்ஸோ வழக்குகளை 2 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று மாநில முதல்வர்களுக்கும், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கும் கடிதம் எழுதியுள்ளேன் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்தில் கடந்தவாரம் கால்நடை பெண் மருத்துவர் ஒருவர் கூட்டுப்பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார், உத்தரப்பிரதேசம் உன்னாவ் நகரில் பெண் ஒருவர் பலாத்காரம் செய்து எரித்துக்கொல்லப்பட்டார். இந்த சம்பவங்கள் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளன.
போலீஸார் விசாரணையை முடிக்கக் காலதாமதம் செய்கிறார்கள், ஆவதும், நீதிமன்றங்கள் நீதி வழங்கப் பல ஆண்டுகள் எடுத்துக்கொள்கின்றன என்று மக்கள் மத்தியில் பரவலான குற்றச்சாட்டுகள் எழுந்தன.
மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் பாட்னாவில் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் இது தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறுகையில், " பெண்களுக்கு எதிராகவும், குழந்தைகளுக்கு எதிராகவும் தொடர்ந்து வன்முறைகள் நிகழ்வது கண்டிக்கத்தக்கது. போக்ஸோ வழக்குகள், பாலியல் பலாத்கார வழக்குகள் விசாரித்து நீதி வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
ஆதலால், போக்ஸோ, பலாத்கார வழக்குகளை 2 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று அனைத்து மாநில முதல்வர்களுக்கும், மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கும் கடிதம் எழுதியிருக்கிறேன். நீதிமன்ற விசாரணை அனைத்தும் 6 மாதங்களுக்குள் முடிக்கப் பட வேண்டும்.
விரைவு நீதிமன்றங்களை உருவாக்கி இந்த பலாத்கார மற்றும் போக்ஸோ வழக்குகள் நிலுவையில் இருந்தால் அவற்றை விரைவாக விசாரித்த முடிக்க முயல வேண்டும் என்று உயர் நீதிமன்றங்களைக் கேட்டுக்கொண்டுள்ளேன் " எனத் தெரிவித்தார்