

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் 73-வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்படும் நிலையில் அவர் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை ரத்து செய்துள்ளார் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.
நாடுமுழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், வன்கொடுமைகள் அதிகரித்திருப்பது அவருக்கு பெரும் மனவேதனையை அளித்துள்ளதால் அவர் பிறந்தநாள் கொண்டாட்டத்தை ரத்து செய்துள்ளார் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
ஹைதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவர், உன்னாவ் நகரில் இளம் பெண் பலாத்காரம் கொலை ஆகிய இரு சம்பவங்களால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மிகுந்த மனவேதனையில் இருந்து வருகிறார். மேலும், டெல்லியில் தீவிபத்தில் 43 பேர் பலியான நேரத்தில் சோனியா காந்தி தனது பிறந்தநாளை காங்கிரஸாரும், தொண்டர்களும் கொண்டாட விரும்பவில்லை. ஆதலால், தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை ரத்து செய்துள்ளார்.
கடந்த 1998-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சிக்குத் தலைவராகப் பொறுப்பேற்ற சோனியா காந்தி 2017-ம் ஆண்டுவரை இருந்து அதன்பின் மகன் ராகுல் காந்திக்கு அந்த பதவியை வழங்கினார். ஆனால், மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று ராகுல் காந்தி பதவிவிலகியதைத் தொடர்ந்து மீண்டும் சோனியா தலைவர் பதவிக்குத் தேர்வு செய்யப்பட்டார்
உன்னாவ் பலாத்காரம், ஹைதராபாத் கால்நடை பெண் மருத்துவர் கொலை ஆகியவற்றுக்குக் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்தில் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்தது. மேலும், நாடாளுமன்றத்துக்கு வெளியே சோனியா காந்தி தலைமையில் போராட்டமும் நடந்தது குறிப்பிடத்தக்கது.