

நாட்டுக்கு உகந்த வகையிலும், நலனுக்காகவும் இந்தியக் குற்றவியல் தண்டனைச் சட்டம்(ஐபிசி), குற்றவியல் நடைமுறைச்சட்டம்(சிஆர்பிசி) ஆகியவற்றில் உரிய திருத்தங்கள் கொண்டுவரப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதிப்படத் தெரிவித்தார்
நாட்டில் பல்வேறு மாநிலங்களில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்துள்ளதும், நீதி வழங்குவதில் தாமதம் ஏற்படுவதிலும் பல்வேறு தரப்பிலும் விவாதங்களையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் ஐசிபி, சிஆர்பிசி திருத்தம் குறித்து அமித் ஷா தெரிவித்துள்ளார்.
விரைவாக நீதி வழங்கவும், நவீன ஜனநாயகத்துக்கு ஏற்றார்போல் சிஆர்பிசி, ஐபிசி யில் திருத்தங்களைக் கொண்டுவருவது குறித்து அனைத்து மாநிலங்களும் தங்கள் ஆலோசனைகளை அனுப்பவும் மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த வாரம் கேட்டுக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில், மாநிலங்களின் போலீஸ் டிஜிபி, ஐஜி ஆகியோரின் 54-வது 3நாள் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டின் நிறைவு நாளான இன்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய பாதுகாப்புத்துறை ஆலோசகர் அஜித் தோவல் , உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா, உள்ளிட்டோர் பங்கேற்றார்கள்.
அந்த மாநாட்டில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாக வெளியிடப்பட்ட அறிக்கையில், " நாட்டின் நலனுக்காகவும், உகந்த வகையிலும் சிஆர்பிசி, ஐபிசியில் இப்போதுள்ள ஜனநாயகத்துக்கு உரியவகையில் மாற்றங்கள் கொண்டுவரப்படும்.
அனைத்து இந்திய போலீஸ் பல்கலைக்கழகம், அனைத்து இந்திய தடயவியல் அறிவியல் பல்கலைக்கழகம், ஆகியவற்றை மாநிலங்களில் கொண்டுவர உள்ளோம்" எனத் தெரிவித்தார்
இந்த மாநாட்டில் போலீஸாரின் செயல்கள், மாநில அளவில் போலீஸாரின் செயல்பாடுகள் குறித்துப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. எல்லைப் புறப்பாதுகாப்பு, போதைமருந்து தடுப்பு, தீவிரவாதத் தடுப்பு, தடயவியல் துறையை மேம்படுத்துதல், டிஜிட்டல் குற்றங்களைத் தடுத்தல் உள்ளிட்டவை குறித்து மாநாட்டில் ஆலோசிக்கப்பட்டது.
அந்தமான் மற்றும் நிகோபர் தீவில் உள்ள அபீர்தீன் போலீஸ் நிலையம், குஜராத்தில் உள்ள பலாஸினோர், மத்தியப்பிரதேசத்தில் உள்ள புர்ஹான்புர் போலீஸ் நிலையங்கள் ஆகியவற்றுக்கு சிறந்த விருது வழங்கப்பட்டது.