

டெல்லியில் தொழிற்சாலை ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் பலியான 43 பேரின் குடும்பத்துக்கும் தலா ரூ.10 லட்சம் இழப்பீடு அளிக்கப்படும் என முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
மத்திய டெல்லியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 43 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பரபரப்பான ராணி ஜான்சி சாலையில் உள்ள அனாஜ் மண்டி என்ற பகுதியில்தான் இந்த தீ விபத்து நடந்துள்ளது.
அதிகாலை நேரம் என்பதால் விபத்தில் சிக்கிய பலரும் தூக்கத்திலேயே மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்துள்ளனர். இந்த விபத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆகியோர் தங்களின் இரங்கலைப் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், விபத்துப் பகுதியை நேரில் பார்வையிட்ட முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், "இந்த தீ விபத்து மிகுந்த மனவேதனையளிக்கிறது. இந்த விபத்து குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.1 லட்சமும் இழப்பீட்டு தொகை வழங்கப்படும்.
மேலும், காயமடைந்தோரின் மருத்துவ சிகிச்சைக்கு ஆகும் செலவை அரசே ஏற்கும்" என்று கூறினார்.
ஏற்கெனவே, பிரதமர் நரேந்திர மோடி, "டெல்லியில் தொழிற்சாலையில் தீ விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அதுபோலவே பலத்த காயமடைந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா 50,000 ரூபாய் வழங்கப்படும்" என அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் பாரதிஜ ஜனதா கட்சி சார்பிலும் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.