Published : 08 Dec 2019 01:37 PM
Last Updated : 08 Dec 2019 01:37 PM

பெரு நிறுவனங்களுக்கு வரிச் சலுகை விவசாயிகளுக்கு கிடையாதா? - டி.கே.எஸ் இளங்கோவன் கேள்வி 

மாநிலங்களவையில் பெருவணிக நிறுவனங்களுக்கு வருமான வரிக்குறைப்பு குறைப்பு மசோதா மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய திமுக எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன் டி.கே.எஸ். இளங்கோவன் பெரு நிறுவனங்களுக்கு வரிச் சலுகை வழங்கும் அரசு விவசாயிகளுக்குச் சலுகை வழங்க மறுக்கிறது ஏன் என கேள்வி எழுப்பினார்.

மாநிலங்களவையில் அவர் பேசியதாவது:

‘‘ஒவ்வொரு நிதிநிலை அறிக்கைகளிலும் வரிகளைக் கூட்டுவதும் குறைப்பதும் இயல்பானவை. ஆனால் இந்தத் திருத்தத்தை ஒரு அவசரச்சட்டத்தின் முலம் அறிமுகப்படுத்த வேண்டியதன் தேவையும் அவசரமும் என்ன என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறேன்.

இந்த நாகரீக உலகில் ஒரு அரசின் முக்கிய பணி என்பது தம் நாட்டில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் சமுக, பொருளாதாரப் பாதுகாப்பு வழங்குவதுதான். அனைத்து மக்களுக்கும் என்பதை அடிக்கோடிட்டுக் கொள்ளுங்கள். ஆனால் இந்த அரசாங்கம் ஒரு சாராரை மட்டுமே கவனிக்கிறது. அவர்கள் பணக்காரர்களை மட்டுமே கவனித்து உதவி செய்கிறார்கள். இன்னொரு பக்கத்தில் தேசிய புள்ளி விவரத்துறை வழங்கியிருக்கும் ஆய்வின்படி மக்களின் நுகரவுப் பொருள் வாங்கும் சக்தி குறைந்திருக்கிறது.

அவர்களுக்கு இந்த அரசு என்ன சலுகை வழங்கப் போகிறது? ஏழை எளிய மக்களுக்கு இந்த அரசு எத்தகைய சலுகை வழங்கப்போகிறது? துரதிருஷ்டவசமாக இந்த நாட்டில் ஆயுள் காப்பிட்டுத் திட்டத்திற்கு மக்கள் செலுத்தக்கூடிய பணத்துக்குக்கூட சரக்கு மற்றம் சேவை வரி விதிக்கப்பட்டுள்ளது. ஆயுள் காப்பீட்டுத் திட்டம் என்பது ஏழை எளிய, நடுத்தர மக்களின் சேமிப்புத் திட்டமாகும். வருமான வரித்துறைகூட இந்தத் தொகைக்கு வரிவிலக்கு அளித்திருக்கும் நிலையில் இந்த அரசு சரக்கு மற்றும் சேவை வரி விதித்திருப்பது என்ன நியாயம்.

எங்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அறிஞர் அண்ணா வழக்கமாகச் சொல்வது என்னவென்றால் ஒரு சிறந்த பொருளாதார கொள்கை என்பது பணக்காரர்களிடமிருந்து பெற்று ஏழைகளுக்கு உதவுவது ‘TAP THE RICH AND PAT THE POOR’ என்பார். ஆனால் இங்கே என்ன நடக்கிறது?

என்னுடைய மரியாதைக்குரிய பாஜக ஜி. வி. எல். நரசிம்ம ராவ் இந்த நடவடிக்கையை மிக வலிமையாக ஆதரித்து பேசினார். அவருடைய பேச்சை நான் உன்னிப்பாகக் கேட்டேன். இதற்கு முன் அவர் ஒரு காலத்தில் எழுதிய மின்னனு வாக்கு இயந்திரங்கள் தவறாகப் பயன்படுத்தப் படுகின்றன என்ற நூலையும் நான் படித்துள்ளேன். நான் அதன் கருத்துக்குள் போக விரும்பவில்லை.

நரசிம்ம ராவ் எந்தக் கருத்தையும் வலிமையாக முன்னிறுத்தக் கூடியவர் என்பதற்காக இதைச் சொன்னேன். சமுகப் பொருளாதாரப் பாதுகாப்பு வழங்குவதில் இந்த அரசு என்ன சாதித்திருக்கிறது?

சமுக தளத்தில் வேற்று மதங்களைச் சார்ந்தவர்களைத் தாக்குவது, யார் என்ன உணவு வேண்டும், என்ன உடை அணிய வேண்டும் என்றெல்லாம் வரையறுத்து அவர்களது தனிநபர் சுதந்திரத்தில் தலையிடுவது போன்ற நடவடிக்கைகளைத் தான் மேற்கொண்டுள்ளது- பொருளாதாரத் தளத்தில் ஏழைகளை வரிகளால் சுரண்டுவது, பணக்காரர்களுக்கு வரிச் சலுகை அளிப்பது என்று நிலைப்பாட்டை மேற்கொண்டுள்ளது. ஆக குடிமக்களின் சமுகப் பொருளாதாரப் பாதுகாப்பது என்பது வேரறுக்கப்பட்டுள்ளது.

இந்த அரசாங்கம் தொழிற்சாலைகள் துவங்குவதில் என்ன பணியாற்றியிருக்கிறது. புதிய வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதில் எத்தகைய வெற்றியைப் பெற்றிருக்கிறது?

பிரதமர் அவர்கள் ஆண்டுக்கு இரண்டு கோடி வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்படும் என்று உறுதி அளித்தாரே, அது நிறைவேறியதா? நீங்கள் இந்தியப் பொருளாதாரம் குறித்து பசுமையான கருத்துக்களை முன்வைக்கலாம்.

நான் மொத்த உள்நாட்டு உற்பத்தி கருத்தை நம்பவில்லை. அது நம் நாட்டின் உண்மையான பொருளாதார நிலையின் அடையாளமாக நான் ஏற்றுக் கொள்ளவில்லை. காரணம் மொத்த உள்நாட்டு உற்பத்தி பல்வேறு குறியீடுகளின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

என்னுடைய கேள்வியெல்லாம் ஏன் இந்த நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கிறது- ஏன் புதிய வேலை வாய்ப்புக்கள் உருவாகவில்லை. ஏன் தனிநபர் நுகர்வு அளவு குறைந்து வருகிறது. ஏன் ஏழ்மை அதிகரித்து வருகிறது? என்பதுதான்.

பெரு நிறுவனங்களுக்கு வரிச் சலுகை வழங்கும் அரசு விவசாயிகளுக்குச் சலுகை வழங்க மறுக்கிறது? விவசாயிகள் தானே மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏறத்தாழ 20 சதவிகிதப் பங்களிப்பு வழங்குகிறார்கள். ஏன் தொழிலாளர்களை இந்த அரசு புறக்கணித்து அவர்களுக்கு எதிரான சட்டங்களை நிறைவேற்றி வருகிறது?

பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகியிருக்கும் பெரும்பான்மை மக்களை மறந்து விட்டு பெருமுதலாளிகளுக்கும் மட்டும் ஏன் சலுகை வழங்குகிறது இந்த அரசு
இவ்வாறு டி.கே.எஸ் இளங்கோவன் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x