டெல்லி தொழிற்சாலையில் தீ விபத்து: 43 பேர் பரிதாப பலி; பிரதமர், கேஜ்ரிவால், அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
டெல்லியில் தொழிற்சாலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 43 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய டெல்லியில் பரபரப்பான ராணி ஜான்சி சாலையில் உள்ள அனாஜ் மண்டி என்ற பகுதியில்தான் இந்த தீ விபத்து நடந்துள்ளது. இப்பகுதியில் பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
இந்த விபத்து குறித்து தீயணைப்புத் துறையினர், "தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. ஆனால், தொழிற்சாலைக்குள் பை தயாரிக்கும் இயந்திரம் இருந்த பகுதியில் இருந்தே தீ பரவத் தொடங்கியுள்ளது. தீ விபத்து ஏற்பட்டபோது 50 பேர் தொழிற்சாலையில் இருந்துள்ளனர். அதிகாலை 5 மணி என்பதால் அனைவருமே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளனர். அதனால், மூச்சுத் திணறலில் பலரும் இறந்துள்ளனர். உயிருடன் சிலரை மீட்டுள்ளோம். மீட்புப் பணியில் 32 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன" என்றனர்.
உயிருடன் மீட்கப்பட்டவர்கள் அனைவரும் டெல்லி ராம் மனோகர் லோஹியா மருத்துவமனை மற்றும் இந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்துக்கு டெல்லி முதல்வர் அர்விந்த கேஜ்ரிவால், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சவுகான் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
43 பேரை பலிகொண்ட இந்த விபத்து தொடர்பாக அர்விந்த் கேஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், "இது மிகவும் சோகமான செய்தி. மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தீயணைப்பு வீரர்கள் திறம்பட பணியாற்றி வருகின்றனர். காயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்" எனத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "டெல்லி தீ விபத்து செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தீ விபத்து பகுதியில் மீட்புப் பணியில் அனைத்து தேவையான உதவிகளையும் மத்திய அரசு செய்து வருகிறது" என்று பதிவிட்டுள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டரில், "டெல்லி தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனிடம் வேண்டுகிறேன். தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
