Last Updated : 07 Dec, 2019 09:16 PM

 

Published : 07 Dec 2019 09:16 PM
Last Updated : 07 Dec 2019 09:16 PM

''என்னை ஏன் தலித் தலைவராக அடையாளப்படுத்துகிறீர்கள்?''-  மல்லிகார்ஜூன கார்கே காட்டம்

என்னை ஏன் தலித் தலைவராக அடையாளப்படுத்துகிறீர்கள்? சித்தராமையா, எடியூரப்பாவை அவர்களின் சாதியின் பெயரால் அடையாளப்படுத்துகிறீர்களா? என மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான‌ மல்லிகார்ஜூன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.

கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 5ம் தேதி நடந்தது. இதன் முடிவுகள் வரும் 9ம்தேதி (திங்கள்கிழமை) வெளியாகிறது.இந்நிலையில் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றிப்பெற்றால் தலித் ஒருவருக்கு முதல்வராகும் வாய்ப்பு உள்ளது என கன்னட‌ ஊடகங்களில் செய்திகள் வெளியானது.

இதற்கு முன்னாள் துணை முதல்வர் பரமேஷ்வரா, '' 2013 தேர்தலில் காங்கிரஸ் வெற்றிப்பெற்ற போது எனக்கு முதல்வர் பதவி கிடைக்கும் நிலை ஏற்பட்டது. ஆனால் நான் தலித் என்பதால் அப்போது முதல்வர் பதவி மறுக்கப்பட்டது. பின்னர் 2018ல் துணை முதல்வர் கிடைத்தது. இதே போல மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கும் தலித் என்பதாலே முதல்வர் பதவி கிடைக்கவில்லை''என கருத்து தெரிவித்தார்.

இதற்கு முன்னாள் பிரதமர் தேவகவுடா, '' 2018ல் காங்கிரஸ் எங்களுடன் கூட்டணி அமைக்க விரும்பிய போது நான் மல்லிகார்ஜூன கார்கே முதல்வராக்க விரும்பினேன். சில காங்கிரஸ் தலைவர்கள் தான் மல்லிகார்ஜூன கார்கே வேண்டாம். குமாரசாமிக்கு முதல்வர் ப‌தவியை தருவதாக கூறினர். எனக்கு விருப்பம் இல்லாமலே குமாரசாமியை முதல்வராக்கினேன்''என தெரிவித்தார்.

தலித் முதல்வர் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் மல்லிகார்ஜூன கார்கேவிடம் கேள்வி எழுப்பிய போது, என்னை ஏன் எப்போதும் தலித் தலைவராக அடையாளப்படுத்துகிறீர்கள். முதலில் என்னை தலித் ஆக அடையாளப்படுத்துவதை நிறுத்துங்கள். நானொரு மூத்த காங்கிரஸ்காரன். 50 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸில் பல்வேறு பொறுப்புகளை வகித்திருக்கிறேன்.

என்னை மட்டும் ஏன் எப்போதும் சாதியின் பெயரால் அடையாளப்படுத்துகிறீர்கள். சித்தராமையாவை குருபா தலைவர் என்றோ, எடியூரப்பாவை லிங்காயத்து தலைவர் என்றோ,குமாரசாமியை ஒக்கலிகா தலைவர் என்றோ சாதியின் பெயரால் அடையாளப்படுத்துகிறீர்களா?

அவர்களிடம் ஒரு குறிப்பிட்ட சாதியை மட்டும் கேள்வி எழுப்புகிறீர்களா? அவர்களிடம் பொதுவான விஷயங்களைப் பேசி, பொதுவான‌ தலைவராக‌ என அழைக்கிறீர்கள். என்னை மட்டும் ஏன் தலித் தலைவராக சுருக்கி பார்க்கிறீர்கள். இது தவறு.

காங்கிரஸ் மேலிடம் எனக்கு வழங்கிய அனைத்து பொறுப்புகளையும் சிறப்பான முறையில் கையாண்டு மக்களுக்கு நல்லது செய்திருக்கிறேன். கர்நாடகாவில் வேறு எந்த தலைவரையும் விட அறிவிலும், அரசியல் அனுபவத்திலும், நிர்வாகத்திறனிலும் நான் குறைந்தவனில்லை. எனது திறமையையும் அனுபவத்தையும் மதித்து முதல்வர் பொறுப்பு கொடுத்தால் ஏற்றுக்கொள்வேன். தலித் என இரக்கப்பட்டு முதல்வர் பதவியை கொடுத்தால் ஏற்க மாட்டேன்''என காட்டமாக தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x