Published : 07 Dec 2019 08:43 PM
Last Updated : 07 Dec 2019 08:43 PM

‘‘கருணை காட்ட வேண்டாம்’’ - கருணை மனுவை திரும்பப் பெற்ற நிர்பயா கொலைக் குற்றவாளி

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா கூட்டுப் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கின் குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மா தான் அனுப்பிய கருணை மனுவை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார்.

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு, 23-வயதான மருத்துவக் கல்லூரி மாணவி ஓடும் பேருந்தில் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு, பேருந்திலிருந்து கீழே வீசப்பட்டார். அவரின் நண்பரும் கடுமையாகத் தாக்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அந்த மாணவி சிங்கப்பூருக்கு மருத்துவ சிகிச்சைக்குக் கொண்டு செல்லப்பட்டு பலன் அளிக்காமல் 2012, டிசம்பர் 29-ம் தேதி உயிரிழந்தார்.

நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த மருத்துவ மாணவியின் பெயர் வெளியிடப்படவில்லை, அவரை நிர்பயா என்றே அழைத்தனர். டெல்லி போலீஸார் கொலை மற்றும் கற்பழிப்பு வழக்குப் பதிவு செய்து ராம்சிங், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்ஷய் தாக்குர் மற்றும் ஒரு இளம் குற்றவாளி என 6 பேரைக் கைது செய்தனர்.

இவர்களில் ராம்சிங், திஹார் சிறையில் 2013-ம் ஆண்டு, மார்ச் மாதம் 11-ந் தேதி தற்கொலை செய்து கொண்டார். ‘நிர்பயா’ வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம் இளம் குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தும் முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் தாக்குர் ஆகிய 4 பேருக்கு மரண தண்டனை விதித்தும் 2013-ம் ஆண்டு செப்டம்பரில் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தன.

ஆனால், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 குற்றவாளிகளுக்கும் இன்னும் தண்டனை நிறைவேற்றப்படாமல் இருந்து வருகிறது. இதில் 3 குற்றவாளிகள் திஹார் சிறையிலும், ஒருவர் மண்டோலி சிறையில் 14-ம் எண் அறையிலும் அடைக்கப்பட்டுள்ளார்.

இவர்களில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 பேரும், குடியரசுத் தலைவருக்குக் கருணை மனு அனுப்பி, தங்களின் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் கருத்தை தெரிவிக்குமாறு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கோரி இருந்தார். குற்றவாளிகளுக்கு கருணை காட்ட வேண்டாம், தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

இந்நிலையில் குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மா தனது கருணை மனுவை, உள்துறை அமைச்சகம் குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதற்கு முன்பே, அதனை திரும்பப் பெறுவதாக தெரிவித்துள்ளார். உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பட்ட கருணை மனுவில் தனது ஒப்புதல் இல்லாமல் கையெழுத்து பெறப்பட்டதாகவும், குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பும் எண்ணம் இல்லை என்றும் வினய் சர்மா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x