உ.பி. முதல்வர் யோகியின் மாவட்டத்தில் 22 ஆண்டுகளாக விசாரணைக்கு காத்திருக்கும் 15,000 உடற்கூறுகள்

உ.பி. முதல்வர் யோகியின் மாவட்டத்தில் 22 ஆண்டுகளாக விசாரணைக்கு காத்திருக்கும் 15,000 உடற்கூறுகள்
Updated on
1 min read

உத்திரபிரதேசத்தில் பல்வேறு காரணங்களால் இறந்த சுமார் 15,000 பேரின் உடற்கூறுகள் கடந்த 22 வருடங்களாக விசாரணைக்காகக் காத்திருக்கின்றன.

நாடு முழுவதிலும் விபத்து, கொலை, தற்கொலை, மர்ம மரணம் எனப் பல்வேறு காரணங்களுக்காக இறந்தவர்களின் உடல்கள் உடற்கூறு பரிசோதனை செய்யப்படுவது வழக்கம். இவற்றில், உறவினர்கள் இல்லாத அநாதைகளாக இருப்பவர்களின் உடல்களும் அடக்கம்.

உடற்கூறு பரிசோதனை செய்யப்பட்ட உடல்களில் முக்கிய பாகங்கள் தடயவியல் மற்றும் அறிவியல் உடற்கூறு ஆய்வகங்களின் சோதனைக்கு அனுப்பப்படும். இந்த பரிசோதனை ஆய்வகங்கள் மிகவும் குறைவு என்பதால் அனைத்திற்கான ஆய்வுகள் உடனடியாக செய்யப்படுவதில்லை.

எனினும், இறந்தவர்களின் வழக்குகள் மீது அளிக்கப்படும் வலியுறுத்தலை பொறுத்து அதன் விசாரணை குறித்தக் காலத்தில் முடிக்கப்பட்டு விடுகிறது. மேலும் சில வழக்குகளில் ஆய்வுகள் விரைவாக முடிக்கப்பட அவற்றுக்கு செய்தி, ஊடகங்கள் அளிக்கும் முக்கியத்துவமும் காரணமாகிறது.

கோரக்பூரில் வைக்கப்பட்டிருக்கும் உடற்கூறுகளில் பெரும்பாலானவை கேட்பாரற்றவர்கள் மீதான வழக்குகளில் சிக்கியவை. இதுபோன்ற உடற்கூறுகள் பல வருடங்களாக பரிசோதனைக்கு அனுப்பாமல் தங்கி உள்ளன.

இதுபோன்ற சுமார் 15,000 பேர்களின் உடற்கூறுகள் உ.பி.யின் கோரக்பூர் மருத்துவமனையில் கடந்த 22 வருடங்களாக விசாரணைக்காகக் காத்திருக்கின்றன. பாட்டில்களில் அடைக்கப்பட்ட இவை கோரக்பூர் அரசு மருத்துவமனையின் உடற்கூறு பரிசோதனையகத்தின் மூன்று அறைகளில் வைக்கப்பட்டுள்ளன.

இதுபோன்ற உடற்கூறுகள் உடலில் இருந்து எடுக்கப்பட்ட ஆறு மாதங்களுக்குள் ஆய்விற்கு அனுப்பப்பட்டால் துல்லியமான முடிவுகள் அறியலாம். இதுபோல், பல வருடங்களாக பாதுகாத்து வைக்கப்பட்டிருப்பதில் ஆய்வுகள் வழக்கிற்கு பலன் அளிக்கும் வகையில் கிடைப்பது சிரமம் எனவும் கருதப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in