

உன்னாவோ வழக்கில் நீதி கோரி சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மறியலில் ஈடுபட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவோவில் பாலியல் பலாத்காரம் செய்து எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் உன்னாவோ வழக்கில் நீதி கேட்டு சட்டப்பேரவை வாயிலில் அமர்ந்து மறியலில் ஈடுப்பட்டுள்ளார் உ.பி. முன்னாள் முதல்வரும் சமாஜ்வாடி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ்.
உன்னாவோ சம்பவத்துக்காக முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ், "உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மாநில போலீஸ் டிஜிபி ஆகியோர் ராஜினாமா செய்யும்வரை எந்த நீதியும் நிலைநிறுத்தப்படாது. உன்னாவோ பெண்ணுக்கு நீதி கேட்டு மாவட்டந்தோறும் நாங்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம்.
இது மிகவும் கொடூரமான சம்பவம். இந்த நாள் ஒரு கறுப்பு நாள். பாஜக ஆட்சியின் கீழ் மாநிலத்தில் இதுபோன்ற சம்பவம் நடப்பது இது முதன்முறையல்ல.
முதல்வர் யோகி ஆதித்யநாத், குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்படுவார்கள் என இதே சட்டப்பேரவையில் முழங்கினார். ஆனால், ஒரு மகளின் உயிரை அவர்களால் காப்பாற்ற முடியவில்லை" எனக் கூறினார்.
முன்னதாக நேற்று (வெள்ளிக்கிழமை) தெலங்கானா என்கவுன்ட்டர் குறித்து கருத்து தெரிவித்திருந்த அகிலேஷ் யாதவ், "யாரோ ஒருவருக்காவது நீதி கிடைத்ததில் மகிழ்ச்சி. சட்டத்திலிருந்து ஓடுபவர்களே எத்தனை தூரம் நீங்கள் ஓடுவீர்கள் என்று பார்ப்போம்? ஒரு சகோதரிக்கு நீதி கிடைத்ததில் மகிழ்ச்சி. ஆனால், எல்லா சகோதரிகளும் மகள்களும் எப்போதும் பாதுகாப்பாக இருக்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் சமூகச் சூழலும் நிரந்தரமாக உருவாக்கப்பட வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு" என்று கூறியிருந்தார்.