

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுக்க உத்தரப் பிரதேச மாநில அரசு என்ன செய்யப்போகிறது என வினவியுள்ளார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் உன்னாவோ பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தைச் சுட்டிக் காட்டி தனது ட்விட்டரில் அவர் இக்கேள்வியை எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "உன்னாவோவில் ஏற்கெனவே நடந்த சம்பவங்களைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் ஏன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு போதிய பாதுகாப்பு வழங்கவில்லை. இச்சம்பவத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய மறுத்த போலீஸ் அதிகாரி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுக்க அரசாங்கம் என்ன செய்யப் போகிறது?
உயிரிழந்த இளம் பெண்ணின் குடும்பத்தார் இத்துயரத்திலிருந்து மீள இறைவன் அவர்களுக்கு ஆசி புரியட்டும் என வேண்டுகிறேன்.
அப்பெண்ணுக்கு நீதி வழங்க முடியாமல் போனதற்கு நாம் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். உத்தரப் பிரதேசத்தில் நிலவும் சட்டத்தின் ஓட்டைகளையே இச்சம்பவம் காட்டுகிறது" எனப் பதிவிட்டுள்ளார்.
மருத்துவமனையில் இருந்தபோது உன்னாவோ பெண் மருத்துவர்களிடன் என்னைக் காப்பாற்றுங்கள் நான் வாழ விரும்புகிறேன் என மன்றாடிய செய்திகள் ஊடகங்களில் வெளியாகின. அச்செய்திகளைக் மேற்கோள் காட்டி பிரியங்கா தனது ட்வீட்களைப் பதிவிட்டுள்ளார்.