

1998-ம் ஆண்டு ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற முன்னாள் அரசு வழக்கறிஞர் ஒருவருக்கு, ராஜஸ்தான் கீழமை நீதிமன்றம் ஒன்று 7 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
ராஜஸ்தானைச் சேர்ந்தவர் ஹரி பாபு கோயல். 1998ம் ஆண்டு இவர் கூடுதல் அரசு தரப்பு வழக்கறிஞராக இருந்தார். அவரது அலுவலகத்தில் தேவேந்திர தத் சர்மா என்பவர் எழுத்தராகப் பணியாற்றி வந்தார். அப்போது அவர்களிடம் ஹசாரி லால் என்ற ஒருவர் சட்ட உதவி கோரி வந்தார்.
அவரிடம், தங்களுக்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால், அவருக்கு எதிரான வழக்கை நீர்த்துப்போகச் செய்வதாக கோயல் கூறினார்.
இதுகுறித்து ஹசாரி லால் ஊழல் தடுப்பு அதிகாரிகளிடம் புகார் அளித்தார். பின்னர், அவரிடமிருந்து ரூ. 1,000 லஞ்சம் வாங்கும்போது அவர்கள் இருவரும் கையும் களவுமாகப் பிடிபட்டனர். அவர் கள் மீது வழக்கு தொடரப் பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் கோயலுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், சர்மாவுக்கு 6 ஆண்டுகால தண்டனையும் விதித்தது.
மூன்று ஆண்டுகள் மற்றும் அதற்குக் குறைவான கால அளவில் சிறைத் தண்டனை பெற்றால், கீழமை நீதிமன்றத்திடமிருந்தே, அவர்கள் ஜாமீன் பெற முடியும்.
ஆனால் இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு 3 ஆண்டு களுக்கு மேல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதால், உயர் நீதிமன்றத்தில் இருந்து ஜாமீன் கிடைக்கும் வரையில் அவர்கள் சிறையில் இருந்தே ஆக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.