

கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் பிஸியோதெரபி மாணவி (நிர்பயா) ஓடும் பேருந்தில் 6 பேர் கும்பலால் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டார். இதில் படுகாயமடைந்த அந்த மாணவி மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் டெல்லி திஹார் சிறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
நிர்பயா வழக்கு கடந்த 7 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்த பிறகும் இன்னும் தண்டனை நிறைவேற்றப்படவில்லை. தெலங்கானா என்கவுன்ட்டரை போன்று, நிர்பயா வழக்கில் தொடர்புடையோரை அப்போதே என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றிருக்க வேண்டும் என்று ஒரு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து நிர்பயா வழக்கை விசாரித்த டெல்லியின் அப்போதைய காவல் ஆணையர் நீரஜ் குமார், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், "வழக்கு விசாரணையின்போது மிகுந்த அழுத்தம் இருந்தது. குற்றவாளிகளை சிங்கங்களுக்கு இரையாக்குங்கள் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. ஆனால் என்கவுன்ட்டரை நான் நினைத்து கூட பார்க்கவில்லை. சட்டத்தின் வழியில் நடந்தேன்" என்று தெரிவித்தார்.