

பெண்களுக்கு எதிரான போக்சோ வழக்குகளின் கீழ் தண்டனை பெறும் குற்றவாளிகள் கருணை மனு தாக்கல் செய்ய வாய்ப்பளிக்கக் கூடாது என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த கூறியுள்ளார்.
தெலங்கானா மாநிலம் ஷம்சாபாத் சுங்கச் சாவடி அருகே 27 வயது கால்நடை பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார். கடந்த 27-ம் தேதி நடந்த இச்சம்பவம் தொடர்பாக கைதான 4 பேரும் இன்று அதிகாலை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த என்கவுன டர் சம்பவத்துக்கு பிரபலங்கள் பலர் பாராட்டு தெரிவித்துள்ள நிலையில் சிலர் விமர்சித்துள்ளனர்.
இதுபோலவே உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண், நீதிமன்றத்திற்கு வரும்போது 5 பேர் அவரை உயிரோடு எரித்தனர். இதில் பலத்த காயமடைந்த அந்தப்பெண், மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில், குற்றவாளிகள் 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்து வரும் நிலையில் இதுபற்றி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த கருத்து தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் சிரோகியில் பிரம்ம குமாரிகள் அமைப்பின் பெண்களுக்கான தேசிய மாநாட்டில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது:-
நாடுமுழுவதும் பெண்கள் பாதுகாப்பு தற்போது முக்கிய பிரச்சனையாக உள்ளது. பொதுவாக பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்படுகிறது. இதுபோன்ற குற்றவாளிகள் கருணை மனு தாக்கல் செய்ய வாய்ப்பளிக்கக் கூடாது.
அதற்கு ஏற்ப சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். இது என்னுடைய கருத்து. இந்த விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டியது நாடாளுமன்றம் தான். அதற்கு ஏற்றவகையில் சட்டத்திருத்தம் செய்யப்பட வேண்டும். இதுபோலவே ஆண் குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர் உரிய கவனம் செலுத்த வேண்டும். பெண்களிடம் உரிய மரியாதையுடன் நடந்து கொள்ள ஆண் குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டும்.
இவ்வாறு ராம்நாத் கோவிந்த் பேசினார்.