

குற்றவாளிகளை கொல்வது எளிது. ஆனால் அவர்களை குற்றவாளிகள் ஆகாமல் இருக்க கல்வி மூலம் நெறிப்படுத்துவது எளிமையானதல்ல என வங்கதேச எழுத்தாளர் நஸ்லிமா நஸ்ரின் தெலங்கானா என்கவுன்டர் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலம் ஷம்சாபாத் சுங்கச் சாவடி அருகே 27 வயது கால்நடை பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார். கடந்த 27-ம் தேதி நடந்த இச்சம்பவம் தொடர்பாக கைதான 4 பேரும் இன்று அதிகாலை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் இந்த என்கவுன டர் சம்பவத்துக்கு பிரபலங்கள் பலர் பாராட்டு தெரிவித்துள்ள நிலையில் சிலர் விமர்சித்துள்ளனர்.
இதுகுறித்து வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் தனது ட்விட்டர் பக்கத்தில், “வங்கதேசத்தில் தீவிரவாதிகள் மற்றும் போதை பொருள் கடத்தல்காரர்கள் போலீஸாரால் என்கவுன்டர் செய்யப்படுகின்றனர். இன்று இந்தியாவில் நான்கு பாலியல் பலாத்கார குற்றவாளிகள் என்கவுன்டர் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக நேரம், பணம் எல்லாம் வீணாகாமல் போன வழியில் இது நல்லது?ஆனால் இது உண்மையில் நல்லதா?
குற்றவாளிகளை கொல்வது எளிது. ஆனால் அவர்களை குற்றவாளிகள் ஆகாமல் இருக்க கல்வி மூலம் நெறிப்படுத்துவது எளிமையானதல்ல. நாம் எளிமையான வழியையே விரும்புகிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.
வங்கதேசத்தை பூர்வீகமாகக் கொண்ட எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின், இஸ்லாமிய மதத்துக்கு எதிரான கருத்துக்களை எழுதி வந்ததாகக் குற்றம்சாட்டி வங்கதேசத்தில் உள்ள இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தஸ்லிமாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதனால், கடந்த 1994-ம் ஆண்டு வங்கதேசத்தை விட்டு வெளியேறிய தஸ்லிமா நஸ்ரின் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைந்து வாழ்ந்து வந்தார். அதன்பின் ஸ்வீடன் நாட்டு குடியுரிமை பெற்ற தஸ்லிமா நஸ்ரின் கடந்த 2004-ம் ஆண்டு முதல் இந்தியாவில் தஞ்சமடைந்து வாழ்ந்து வருகிறார்.