

தெலங்கானாவில் பெண் மருத்துவரை பலாத்காரம் செய்து எரித்துக் கொன்ற வழக்கில் கைதானவர்கள் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டது ஏன்? அது நடந்தது எப்படி? என ஹைதராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனார் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கினார்.
தெலங்கானாவில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை அளிக்க வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலித்தன. இந்நிலையில், கடந்த 27-ம் தேதி நடந்த இச்சம்பவம் தொடர்பாக கைதான 4 பேரும் இன்று அதிகாலை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த என்கவுன்ட்டரை பொதுமக்கள் பரவலாகக் கொண்டாடி வரவேற்றாலும் அரசியல் கட்சித் தலைவர்கள் சிலர் இதற்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சர்ச்சைக்குள்ளான என்கவுன்ட்டர் தொடர்பாக ஹைதராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனார் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார்.
அந்த சந்திப்பில், "தெலங்கானா மாநிலம் ஷம்சாபாத்தில் கால்நடை பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சம்பவம் நடந்த இடத்திலிருந்து திரட்டப்பட்ட தடயங்களைக் கொண்டு அறிவியல் ரீதியாக நடந்த ஆய்வுகளின் அடிப்படையிலேயே முகமது ஆரிஃப் (26), ஜொல்லு சிவா(20), ஜொல்லு நவீன் (20), சிந்தகுந்தா சென்னகேசவலு (20) ஆகிய 4 பேரையும் நாங்கள் கைது செய்தோம்.
அவர்கள் நான்கு பேரையும் நவம்பர் 30-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினோம். தொடர்ந்து நால்வரையும் 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்தோம்.
4-வது நாளான இன்று (டிச.6) விசாரணைக்காக அவர்களை சொர்ணப்பள்ளி சிறையில் இருந்து சம்பவம் நடந்த இடத்துக்கு அழைத்துச் சென்றோம்.
காலை 5.45 மணிக்கு அங்கு சென்றோம். நவம்பர் 27-ல் நடந்த குற்றத்தை சித்தரித்துக் காட்டச் சொன்னோம். அப்போது, நாங்கள் 10 காவலர்கள் இருந்தோம். முதலில் நாங்கள் சொல்வதைச் செய்யப்போவதுபோல் பாசாங்கு செய்தனர். அவர்களில் ஒருவர் திடீரென யாரும் எதிர்பாராத வேளையில் காவலர் ஒருவரிடமிருந்து துப்பாக்கியைப் பறித்தார். எங்களை நோக்கிச் சுட்டார். அவருடன் மற்றவர்களும் இணைந்து கொண்டனர்.
தற்காப்புக்காக நாங்கள் அவர்களை நோக்கிச் சுட்டோம். இதில் அந்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். கைதிகள் தாக்கியதில் காவலர்கள் இருவர் காயமடைந்தனர். அவர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்" என்று விளக்கமளித்தார்.
மேலும், அந்த 4 பேருக்கும் தெலங்கானா, ஹைதராபாத்தில் நடந்த பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்பிருப்பதாக போலீஸார் சந்தேகிப்பதாகவும் அவர் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் தனிப்பட்ட சுதந்திரத்தைக் கருத்தில் கொண்டு அவர்களை ஊடகங்களோ மக்களோ தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.