

தெலங்கானாவில் பெண் மருத்துவரை பலாத்காரம் செய்து எரித்து கொன்ற 4 பேரும் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டதற்காக யோகா குரு பாபா ராம்தேவ் போலீஸுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலம் ஷம்சாபாத் சுங்கச் சாவடி அருகே 27 வயது கால்நடை பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார்.
கடந்த 27-ம் தேதி நடந்த இச்சம்பவம் தொடர்பாக கைதான 4 பேரும் இன்று அதிகாலை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இது குறித்து யோகா குரு பாபா ராம்தேவ், "தெலங்கானா போலீஸ் செய்துள்ளது மிகவும் துணிச்சலான சம்பவம். நீதி நிலை நிறுத்தப்பட்டுள்ளது என்றே கூறுவேன்.
இதிலுள்ள சட்ட விவகாரங்கள் வேறு, ஆனால் உணர்வுப்பூர்வமாக மக்கள் இப்போது அமைதியடைந்துள்ளார்கள்.
மதம், கலாச்சாரம் மீது கறை போன்றிருக்கும் இத்தகைய குற்றவாளிகளுக்கு இதுபோன்ற உடனடி தண்டனை வழங்கியது சரியே. தீவிரவாதிகளுக்கு ராணுவம் அளிப்பதுபோல் இந்த குற்றவாளிகளுக்கு போலீஸ் வழங்கிய தண்டனை சரியே" எனக் கூறியுள்ளார்.
பாபா ராம்தேவ் போல தெலங்கானா என்கவுன்ட்டர் சம்பவத்துக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துவரும் நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா சர்மா, பாஜகவின் மூத்த தலைவர் மேனகா காந்தி, பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா குட்டா ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.