சாதி மறுப்பு திருமண ஊக்கத் தொகைக்கான இலக்கு 500  அடையவேண்டிய கட்டாயமில்லை: அமைச்சர் கட்டாரியா

ரத்தன் லால் கட்டாரியா - கோப்புப் படம்
ரத்தன் லால் கட்டாரியா - கோப்புப் படம்
Updated on
1 min read

சாதிமறுப்பு திருமண ஊக்கத்தொகையின் வருட இலக்கு 500 ஐ அடையவேண்டியக் கட்டாயமில்லை என மத்திய சமூகநலத்துறை இணை அமைச்சர் ரத்தன் லால் கட்டாரியா தெரிவித்துள்ளார். இந்த தகவலை அவர் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மதுரை எம்.பி.யான சு.வெங்கடேசனின் கேள்விக்கானப் பதிலில் அளித்துள்ளார்.

இது குறித்து மக்களவையில் மத்திய சமூகநலத்துறை இணை அமைச்சர் ரத்தன் லால் கட்டாரியா எழுத்துமூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
சமூக ஒருமைபாட்டிற்கான டாக்டர் அம்பேத்கர் திட்டத்தின் மூலம் சாதி மறுப்பு திருமணம் செய்துக் கொள்ளும் ஒவ்வொரு மணமக்களுக்கும் வழங்கப்படும் ஊக்கத் தொகை ரூ. 2.5 லட்சம்.

2015-16 ம் ஆண்டு 544 சாதி மறுப்பு தம்பதியினர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 54 பேருக்கு மட்டும் ஊக்கத்தொகை அளிக்கப்பட்டது. இதேபோல் 2016-17, 2017-18, 2018-19 ஆகிய ஆண்டுகளில் முறையே 711 விண்ணப்பங்களில் 67 தம்பதியினருக்கும், 582 விண்ணப்பங்களில் 136 தம்பதியினருக்கும், 493 விண்ணப்பங்களில் 120 தம்பதியினருக்கு மட்டுமே வழங்கப்பட்டது.

மேலும், ஒரு வருடத்திற்கு 500 எனும் இலக்கு என்பது 2013-14, 2014 -15 ஆகிய இரு ஆண்டுகளுக்கு பரிசோதனை அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு மட்டுமே. 2015 ம் ஆண்டையும் தாண்டியும் இத்திட்டத்தை தொடர வேண்டும் என டாக்டர் அம்பேத்கர் மையம் முடிவெடுத்தது.

வருடத்திற்கு 500 எனும் இலக்கு அடையாள பூர்வமானது மட்டுமே என்றும் இலக்கை முழுமையாக நிறைவேற்ற வேண்டிய கட்டாயமில்லை. இந்த. ஊக்கத் தொகையினை அதிகரிக்கும் திட்டம் அரசிடம் எதுவும் இல்லை.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in