

தெலங்கானா என்கவுன்ட்டரை வரவேற்று பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் ட்வீட் செய்துள்ள நிலையில் மற்றொரு வீராங்கனையான ஜூவாலா குட்டா அதனை எதிர்த்து ட்வீட் செய்துள்ளார்.
தெலங்கானா மாநிலம் ஷம்சாபாத் சுங்கச் சாவடி அருகே 27 வயது கால்நடை பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார்.
கடந்த 27-ம் தேதி நடந்த இச்சம்பவம் தொடர்பாக கைதான 4 பேரும் இன்று அதிகாலை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து ஜூவாலா குட்டா தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்த என்கவுன்ட்டர் இனி எதிர்காலத்தில் பலாத்கார சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்குமா? இன்னுமொரு முக்கியக் கேள்வி. எல்லா பலாத்காரர்களும் இதே போல் நடத்தப்படுவார்களா? சமூகத்தில் அவர்கள் எந்த படிநிலையில் இருந்தாலும் (பெரிய இடத்துப் பிள்ளைகளுக்கும்) இதே போல் நடத்தப்படுவார்களா?" என வினவியுள்ளார்.
இதேபோல் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா சர்மா, பாஜகவின் மூத்த தலைவர் மேனகா காந்தி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.