

குற்றவியல் நீதித் துறையை வலுப்படுத்தும் தருணம் வந்துவிட்டதாக தெலங்கானா என் கவுன்ட்டர் குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலம் ஷம்சாபாத் சுங்கச் சாவடி அருகே 27 வயது கால்நடை பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார்.
கடந்த 27-ம் தேதி நடந்த இச்சம்பவம் தொடர்பாக கைதான 4 பேரும் இன்று அதிகாலை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அரவிந்த் கேஜ்ரிவால், "ஹைதராபாத், உன்னாவோ போன்று அண்மைக்காலமாக வெளிச்சத்துக்கு வரும் பாலியல் பலாத்கார சம்பவங்கள் மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாகவே அவர்கள் தெலங்கானா என்கவுன்ட்டர் குறித்து மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
மக்களுக்கு குற்றவியல் நீதித் துறையின் மீது அவநம்பிக்கை வந்துவிட்டது. இது வருந்தத்தக்கது. அனைத்து அரசுகளும் ஒன்றிணைந்து குற்றவியல் நீதித் துறையை வலுப்படுத்தும் தருணம் வந்துவிட்டது" என்றார்.
முன்னதாக இன்று காலை, தெலங்கானா என்கவுன்ட்டர் நிகழ்விடத்தில் திரண்ட மக்கள் அங்கிருந்த போலீஸார் மீது பாலத்தின் மேல் இருந்தவாறே ரோஜா மலர்களைத் தூவி வாழ்த்தினர். டிசிபி வாழ்க; ஏசிபி வாழ்க என கோஷமிட்டனர். பெண் மருத்துவரின் அண்டை வீட்டார் திரண்டு வந்து போலீஸாருக்கு இனிப்புகளை வழங்கினர். சிலர் போலீஸாரை தங்களின் தோள்களின் மீது தூக்கி ஆரவாரம் செய்தனர். பெண்கள் போலீஸாரின் கைகளில் ராக்கி கட்டி நன்றி தெரிவித்தனர்.