

என் மகளின் ஆன்மா சாந்தியடைந்திருக்கும் என கண்ணீர் மல்க தெலங்கானா என்கவுன்ட்டர் குறித்து தெரிவித்தார் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை.
கடந்த நவம்பர் 27-ல், தெலங்கானா மாநிலம் ஷம்சாபாத் சுங்கச் சாவடி அருகே 27 வயது கால்நடை பெண் மருத்துவரை, லாரி ஓட்டுநர் உள்ளிட்ட நால்வர் பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக் கொன்றனர். இந்தக் கொடூரக் கொலையில் லாரி ஓட்டுநர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 3 மணியளவில் கால்நடை பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 4 பேரையும் போலீஸார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர்.
பெண் மருத்துவர் கொல்லப்பட்ட அதே இடத்திலேயே முகமது ஆரிஃப் (26), ஜொல்லு சிவா(20), ஜொல்லு நவீன் (20), சிந்தகுந்தா சென்னகேசவலு (20) ஆகிய 4 பேரும் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த பெண்ணின் தந்தை, என் மகள் இறந்து 10 நாட்கள் ஆகிவிட்டன. இன்று என் மகளின் ஆன்மா சாந்தியடைந்திருக்கும். போலீஸாருக்கும் அரசாங்கத்துக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் கண்ணீர் மல்கக் கூறினார்.
இறந்துபோன மருத்துவரின் சகோதரி கூறும்போது, "எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்ஹது. இனிமேல் இத்தகைய செயலில் ஈடுபட நினைப்பவர்களுக்கு இந்த என்கவுன்ட்டர் ஒரு பாடமாக இருக்கும். போலீஸார் இந்த நடவடிக்கையை வரலாறு காணாத வேகத்தில் எடுத்துள்ளனர். எங்களின் துக்கத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்" என்றார்.