

தெலங்கானா பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக் கொன்ற வழக்கில் கைதான 4 பேரும் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டதற்காக ஹைதராபாத் போலீஸாருக்கு பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் 'சிறந்த வேலை. சல்யூட் ஹைதராபாத் போலீஸ்' என ட்வீட் செய்துள்ளார்.
முன்னதாக, கடந்த நவம்பர் 27-ல், தெலங்கானா மாநிலம் ஷம்சாபாத் சுங்கச் சாவடி அருகே 27 வயது கால்நடை பெண் மருத்துவரை, லாரி ஓட்டுநர் உள்ளிட்ட நால்வர் பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக் கொன்றனர். இந்தக் கொடூரக் கொலையில் லாரி ஓட்டுநர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 3 மணியளவில் கால்நடை பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 4 பேரையும் போலீஸார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர். பெண் மருத்துவர் கொல்லப்பட்ட அதே இடத்திலேயே 4 பேரும் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்துக்கு நாடு முழுவதும் பரவலாக வரவேற்பு குவிந்து வருகிறது. மாயாவதி, உமா பாரதி போன்று பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்களுமே கூட தங்களின் பாராட்டுகளைப் பதிவு செய்து வருகின்றனர்.