

பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதில் தெலங்கானா போலீஸிடம் உத்தரப் பிரதேசம் மற்றும் டெல்லி போலீஸார் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என அம்மாநில முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
கடந்த நவம்பர் 27-ல், தெலங்கானா மாநிலம் ஷம்சாபாத் சுங்கச் சாவடி அருகே 27 வயது கால்நடை பெண் மருத்துவரை, லாரி ஓட்டுநர் உள்ளிட்ட நால்வர் பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக் கொன்றனர். இந்தக் கொடூரக் கொலையில் லாரி ஓட்டுநர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை கால்நடை பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 4 பேரையும் போலீஸார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர். பெண் மருத்துவர் கொல்லப்பட்ட அதே இடத்திலேயே 4 பேரும் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு கருத்து தெரிவித்துள்ள மாயாவதி, "பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதில், உத்தரப் பிரதேசம் மற்றும் டெல்லி போலீஸார் ஹைதராபாத் போலீஸாரிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
ஆனால், இங்கு துரதிர்ஷ்டவசமாக குற்றவாளிகள் மாநில அரசின் விருந்தாளிகள் போல் நடத்தப்படுகின்றனர்.
உத்தரப் பிரதேசத்தில் இப்போது காட்டாட்சி ஆட்சியே நடக்கிறது. மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்க அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது" என்றார்.
பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவோ பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் வழக்கில் ஆஜராவதற்காக நீதிமன்றம் சென்றபோது மர்ம கும்பலால் எரித்துக் கொல்லப்பட்டார்.
இந்நிலையில், மாயாவதியின் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.