

நாட்டையே உலுக்கிய ஹைதராபாத் கால்நடை பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 4 பேரையும் போலீஸார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர்.
பெண் மருத்துவர் கொல்லப்பட்ட அதே இடத்திலேயே 4 பேரும் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வழக்கு தொடர்பாக 4 பேரை சைபராபாத் போலீஸார் கைது செய்திருந்தனர்.
தெலங்கானா மாநிலம் ஷம்சாபாத் சுங்கச் சாவடி அருகே 27 வயது கால்நடை பெண் மருத்துவரை, லாரி ஓட்டுநர் உள்ளிட்ட நால்வர் பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக் கொன்றனர். இந்தக் கொடூரக் கொலையில் லாரி ஓட்டுநர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது. இந்த வழக்கில் விரைவாக நீதி கிடைக்க வழிவகை செய்யும் வகையில், சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரிக்க அங்குள்ள நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
இந்த நிலையில், வழக்கு விசாரணைக்காக குற்றம் நடந்த இடமான சட்டன்பள்ளிக்கு குற்றவாளிகள் 4 பேரும் அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது, அவர்கள் தப்பி ஓட முயன்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, 4 பேரையும் போலீஸார் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றனர்.
சைபராபாத் போலீஸார் இன்னமும் இதன் விவரங்களை அறிவிக்கவில்லை, விரைவில் அதிகாரபூர்வ விவரங்கள் வெளியாகும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.