

எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு கிலோ ரூ.25 என்ற விலையில் ஒரு லாரி முழுதும் வெங்காயம் தருவதாக பாஜக எம்.பி. ஒருவர் மக்களவையில் தெரிவித்தது சலசலப்பை உருவாக்கியது.
பாலியா தொகுதி எம்.பி. விரேந்திர சிங், இவர் பாரதிய கிசான் மோர்ச்சா அமைப்பின் தலைவரும் ஆவார். மகாராஷ்ட்ரா, குஜராத் மட்டுமல்லாது உ.பி.யிலும் வெங்காயம் பெரிய அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது என்றார்.
தன்னுடைய தொகுதியில் உள்ள முகமதாபாத்தில் அதி உயர்வுத் தர வெங்காயம் உற்பத்தி ஆகிறது, எதிர்க்கட்சிகளுக்கு வேண்டுமானால் கிலோ ரூ.25 என்ற விலையில் ஒரு லாரி வெங்காயம் சப்ளை செய்கிறேன் என்றார்.
தன்னுடன் தொகுதிக்கு எதிர்க்கட்சியினர் வந்தால் மலிவு விலைக்கு வெங்காயம் அளிக்கத் தயார் என்றார்.
காங்கிரஸ் உறுப்பினர் கே.சுரேஷ் என்பவர் வெங்காய விலை உயர்வைக் கண்டித்தும் நாட்டில் உற்பத்தி குறைந்ததையும் விமர்சித்துக் கேள்வி எழுப்புகையில் விரேந்திர சிங் பாஜக எம்.பி. இவ்வாறு பதிலுரைத்தார்.
வெங்காயம் விலை கிலோ ரூ.150க்கும் சில இடங்களில் உயர்ந்து வருவதாக செய்திகள் எழுந்ததையடுத்து மக்களவையில் வேளாண்மை குறித்த விவாதத்தில் இந்தக் கேள்வி எழுப்பப்பட்டது.