கழிப்பறைகளுக்கான மத்திய அரசு நிதி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது –நிரூபிப்பதாக மக்களவையில் திமுக சவால்

கழிப்பறைகளுக்கான மத்திய அரசு நிதி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது –நிரூபிப்பதாக மக்களவையில் திமுக சவால்
Updated on
2 min read

நாடு முழுவதிலும் கழிப்பறைகள் கட்ட அளிக்கப்பட்டு வரும் மத்திய அரசு நிதி தவறாகப் பயன்படுத்தப்படுவதாக திமுக புகார் கூறியுள்ளது. இதை நிரூபிப்பதாக அக்கட்சி சார்பில் மத்திய அரசிற்கு டாக்டர்.எஸ்.செந்தில்குமார் எம்.பி சவால் விடுத்தார்.

இது குறித்து மக்களவையில் நேற்று 2019 ஆண்டிற்கான நிதி ஒதுக்கீடு மசோதா மீது தர்மபுரி தொகுதியின் எம்‌.பியான டாக்டர். செந்தில்குமார்‌ நிகழ்த்திய உரையில் பேசியதாவது:

கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின்‌ கீழ்‌, பயனாளிகளுக்கு நேரடியாக பணம்‌ தருவதால்‌, ஊழல்‌ தடுக்கப்பட்டுள்ளதாக, நிதியமைச்சர்‌ பெருமைப்பட்டுக்‌ கொள்கிறார்‌. உண்மை‌ என்ன தெரியுமா?

அந்த திட்டத்தின்‌ கீழ்‌, வேலையை பெறுவதற்கே கூட லஞ்சம்‌ தர வேண்டியதாகியுள்ளது. உண்மையில்‌, கீழ்‌மட்ட அளவில்‌ ஊழல்‌ உள்ளது. இதை, நிதியமைச்சர்‌ நினைவில்‌ கொள்வார்‌ என நம்புகிறேன்‌.

வரி செலுத்துவோரின்‌ பணத்தை‌ வைத்துதான்‌, திட்டங்கள்‌ வாயிலாக, அரசு செலவிடுகிறது. அத்தகைய வரிப்பணமானது, வறிய நிலையில்‌ உள்ள ஏழைகள்‌, பெண்கள்‌ உள்பட சமூகத்தின்‌ அடித்தட்டு மக்களும்‌ பயன்பெறும்‌ வகையில்‌ சென்றடையுமாறு பார்த்துக்‌ கொள்ள வேண்டியது
அரசின்‌ கடமை.

திறந்தவெளி கழிப்பிடங்களை ஒழிக்கும்‌ திட்டத்தில், நாடு முழுவதும்‌ லட்சக்கணக்கான கழிப்பறைகள்‌ கட்டப்பட்டுள்ளன. எனது தொகுதியான தர்மபுரியில் கூட ஆயிரக்கணக்கில்‌ கட்டப்பட்டுள்ளன. இவற்றில்‌ 10 சதவீதம் கூட, பயன்பாட்டுக்கு உரியதாக இல்லை. கழிப்பறை கட்ட ரூ.12 ஆயிரம்‌ செலவிடப்படுகிறது. இதில்‌, ரூ.3,500 ஐ மத்திய அரசு தருகிறது. இந்த பணத்தில்‌ ஒரு கழிப்பறையை கட்டிவிட முடியுமா?

பணத்தை பெற்றுக்‌ கொண்டு, ஏதோ பெயரளவில்‌, ஒரு அறையை கட்டி தருகின்றனர்‌., அதுவும்‌ பயன்படுத்த முடியாத அளவுக்கு உள்ளது. வேண்டுமானால்‌, நிதியமைச்சர்‌, தனது பிரதிநிதியை என்னுடன்‌ அனுப்பி வைக்கட்டும்‌. எனது தொகுதியில்‌, 10 சதவீதம்‌ கூட உருப்படியாக கழிப்பறைகள்‌ கட்டப்படவில்லை என்பதை, நான்‌ நிரூபிக்கிறேன்‌. சவாலாகவே இதை கூறுகிறேன்‌.

திட்டங்களின் பெயரில்‌, அரசாங்கத்தின்‌ கோடிக்கணக்கான நிதியும்‌, வீணாகும்‌ நிலையே உள்ளது. ஒரு திட்டத்தை அமல்படுத்திய பின் அதன்‌ பயனை, ஒரு ஆண்டு கழித்து மீண்டும்‌ ஆராய்ந்து, அது பயனுள்ளதாக இருக்கிறதா? இல்லையா? என்பதை கண்டறியும்‌ நடைமுறை,
அரசுக்கு வர வேண்டும்‌.

ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகத்தை தர அரசு விரும்பினால்‌, அதற்கு, என்னுடைய பரிந்துரை எதுவெனில்‌,
எம்‌.பி.,க்களுக்கு சம்பளத்தையும்‌, தொகுதி மேம்பாட்டு நிதியையும்‌, அதிகரித்து வழங்க வேண்டும். ஒரு எம்‌.எல்‌.ஏ.,வே, தனது ஒரு சட்டசபை தொகுதிக்கு, ரூ.3 கோடி மேம்பாட்டு நிதியாக பெறுகிறார்‌.

ஆறு சட்டப்பேரவை தொகுதிகள்

கேரளா போன்‌ற மாநிலங்களில்‌, ரூ.6 கோடி வரை பெறுகின்றனர்‌. நான்‌, ஒரு எம்‌.பி., எனக்கு கீழ்‌, ஆறு சட்டசபை தொகுதிகள்‌ வருகின்றன. அப்படியெனில்‌, எனக்கு மத்திய அரசு எவ்வளவு தர வேண்டும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்‌.

தொகுதிக்கு என, உருப்படியாக ஏதாவது நலத்திட்டங்களை எம்‌.பி.,க்கள்‌ செய்து தர அரசு விரும்பினால் தொகுதி மேம்பாட்டு நிதி உயர்த்தப்பட வேண்டும்‌.

மத்திய வரிதொகுப்பில் தமிழகத்தின் பங்கு ரூ.30,00 கோடி மத்திய தொகுப்புக்‌கு அதிக அளவில்‌ வரி பங்களிப்பை செய்தும்‌, தமிழ்நாட்டிற்கு உரிய பங்கீட்டை மத்திய அரசு வழங்குவதில்லை. மத்திய வரித் தொகுப்புக்கான தமிழ்நாட்டின்‌ பங்கீடு ரூ.30 ஆயிரம்‌ கோடிக்கும் அதிகம்.

தமிழ்நாடு அரசின்‌ ஜி.எஸ்‌.டி. வரிவசூலிப்பு ரூ.64 ஆயிரத்து 23 கோடி. மத்திய அரசுக்கு, இவ்வாறு மிகப்பெரிய நிதிப்‌பங்களிப்பை செய்தும்கூட, தமிழ்நாடு திரும்பப்‌ பெறுவது சொற்ப அளவே. இது நியாயமல்ல

மஹாராஷ்டிரா, குஜராத்‌, ஹரியானா, தமிழ்நாடு போன்ற மாநிலங்கள்‌, மத்திய அரசுக்கு ரூ.100 ரூபாயை தந்துவிட்டு, வெறும்‌ ரூ.30 பெறுகின்றன. ஆனால்‌ சில மாநிலங்களோ ரூ.100 ரூபாய்‌ தந்துவிட்டு ரூ.200-க்கும் மேலாக மத்திய அரசிடம்‌ பெறுகின்றன. இது நியாயமல்ல.

கடந்த தேர்தலுக்கு முன்‌, மொரப்பூர்‌- தர்மபுரி இடையிலான புதிய ரயில்பாதை திட்டம்‌ அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு, 358 கோடியே 9 லட்ச ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்படுவதாக தெரிவித்து இதுவரையில்‌ ஒரு சில லட்சங்கள்‌ மட்டுமே தரப்பட்டுள்ளன.

எனவே, இத்திட்டத்தை நிறைவேற்றத்‌ தேவையான முழு நிதியையும்‌ விரைந்து ஒதுக்க,நிதியமைச்சர்‌ முன்வர வேண்டும்‌. இந்த நிதி ஒதுக்கீடு மசோதாவானது, 'தமிழகத்தை ஒதுக்கிவிடும்‌ மசோதா' வாக இருந்து விடக்‌ கூடாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in