

ப.சிதம்பரம் முதல் நாளிலேயே ஜாமீன் நிபந்தனையை மீறி விட்டதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் டெல்லியின் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். 106 நாட்களுக்குப் பிறகு அவர் நேற்று ஜாமீனில் விடுதலை ஆனார்.
ப.சிதம்பரம் திஹார் சிறையிலிருந்து நேற்று வெளியே வந்தார், காங்கிரஸ் தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்தநிலையில் விடுதலையான மறுநாளான இன்று நாடாளுமன்றம் வந்தார். வெங்காய விலை உயர்வை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்று போராட்டம் நடத்தினர்.
சிதம்பரமும் இந்த போராட்டத்தில் பங்கேற்றார்.தொடர்ந்து அவர் மாநிலங்களவைக்குச் சென்று கூட்டத்தில் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
‘‘நான் அமைச்சராக இருந்தபோது எனது நிலைப்பாடு தெளிவானது. என்னுடன் பணியாற்றிய அதிகாரிகள், கலந்துரையாடிய தொழிலதிபர்கள், என்னை கவனித்து வரும் பத்திரிகையாளர்கள் என அனைவருக்கும் இது பற்றி தெரியும்.’’ எனக் கூறினார்.
இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில் ‘‘முன்னாள் நிதியமைச்சர் சிதம்பர் ஐஎன்எக்ஸ் வழக்கில் ஜாமீன் பெற்று முதல் நாளிலேயே நிபந்தனையை மீறி விட்டார்.
வழக்கு தொடர்பாக பொது வெளியில் கருத்து தெரிவிக்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்து இருந்தது. ஆனால் அவர் தான் அமைச்சராக இருந்தபோது தெளிவுடனும், நேர்மையுடனும் நடந்து கொண்டதாக கூறி இருக்கிறார். இந்த நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது’’ எனக் கூறினார்.