

கடந்த 5 ஆண்டுகளில் 96 மூத்த அதிகாரிகள் உள்ளிட்டு, ஊழலில் சிக்கிய 220க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் முன்கூட்டியே கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இன்று மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமான பதிலில் இதைத் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:
''ஜூலை 2014 முதல் 2019 அக்டோபர் வரையிலான 5 ஆண்டுகளில் வெவ்வேறு அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு அரசுத் துறைகளில் பணியாற்றிய அரசு ஊழியர்கள் குரூப் 'ஏ' அதிகாரிகள் 96 பேர் மற்றும் 126 குரூப் 'பி' அதிகாரிகள் 126 பேர் ஆக மொத்தம் 222 பேர் ஊழலில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டதால் அரசுப் பணியாளர் அடிப்படை விதிகளை மீறியுள்ள வகையில் இவர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
பொது நலன், ஒருமைப்பாடு, பயனற்ற தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் அரசு அதிகாரிகளை முன்கூட்டியே ஓய்வு அளிக்கும் உரிமையை பணியாளர் சட்டப்பிரிவு எஃப்ஆர் 56 (ஜே) வழங்குகிறது. அரசாங்கத்தின் செயல்திறனை மேம்படுத்துவதை எஃப்ஆர் 56 (ஜே) இன் கீழ் உள்ள விதிகள் உறுதி செய்கிறது.''
இவ்வாறு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.