Last Updated : 05 Dec, 2019 12:01 PM

 

Published : 05 Dec 2019 12:01 PM
Last Updated : 05 Dec 2019 12:01 PM

சூடான் தீ விபத்து: இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் கடிதம்

புதுடெல்லி

சூடானில் ஏற்பட்டுள்ள தீவிபத்தில் நடவடிக்கை எடுக்க விழுப்புரம் தொகுதி எம்.பியான டி.ரவிகுமார் மத்திய அரசை வலியுறுத்தி உள்ளார். இதற்காக அவர் மத்திய வெளியுறத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து விழுப்புரம் தொகுதி எம்.பியான டி.ரவிகுமார் தனது கடிதத்தில் கூறியிருப்பதாவது: உயிர்பிழைத்துள்ள தொழிலாளர்கள் அத்தியாவசிய தேவைகளை நிறைவுசெய்ய வழியின்றி தவிக்கின்றனர். அத்தியாவசிய தேவைகளை நிறைவுசெய்யவும், அவர்களைத் தாயகம் அழைத்துவரவும் தேவையான உதவிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

இதில், தமிழகத்தை சேர்ந்தவர்கள் 19 பேர். இவர்கள் உறவினர்கள் தூதரக அதிகாரிகளை தொடர்புகொண்டு தமிழில் பேசும் வசதி அவசியம். எனவே, இந்தியத் தூதரகங்களில் தமிழ் தெரிந்த ஒருவரையாவது பணியில் அமர்த்தவேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரான டி.ரவிகுமார், சூடான் மருத்துவமனையில் இருக்கும் ஷபீக் அகமது என்பவரிடம் தொலைபேசியில் பேசியுள்ளார். இதில் அவர், பெரும்பாலான பணியாளர்களுக்கு சுமார் மூன்று மாதங்களாக ஊதியம் அளிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட இந்தியர்கள் அனைவருமே தம் தாய்நாடு திரும்ப தவிப்புடன் இருப்பதாகவும் ஷபீக் கூறியுள்ளார். மேலும், அந்த தீவிபத்தில் பலரது பாஸ்போர் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் கருகி விட்டதாகவும் அவர் ரவிகுமாரிடம் கூறியுள்ளார்.

எனவே, இந்த பணியாளர்களது அனைத்து தேவைகளையும் இந்திய தூதரக அதிகாரிகள் பூர்த்தி செய்து அனைவரையும் தம் நாடு திரும்ப உதவ வேண்டும் எனவும் ரவிகுமார் தனது கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x