

வெங்காய விலை உயர்வைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்று நடத்தியப் போராட்டத்தில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ள மூத்த காங்கிரஸ் தலைவர் சிதம்பரமும் பங்கேற்றார்.
மகாராஷ்டிராவில் பருவம் தவறி கடந்த மாதம் பெய்த இந்த மழையால் அறுவடை செய்யும் நிலையில் இருந்த வெங்காயப் பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதனால் வெங்காயம் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. போதிய வெங்காயம் சந்தைக்கு வராத நிலையில் அதன் விலையும் உயர்ந்தது.
நாட்டின் பல நகரங்களிலும் சில்லறை விற்பனையில் பெரிய வெங்காயத்தின் விலை அதிகபட்சமாக 120 ரூபாய் வரை விற்பனையானது. வெங்காயத்தைப் பதுக்கி வைத்திருக்கும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுகளும் உத்தரவிட்டன.
வெங்காயத்தின் விலை சற்று குறைந்து இருந்த நிலையில் தற்போது மீண்டும் வெங்காயம் விலை உயர்ந்துள்ளது. சில்லறை விற்பனையில் கிலோ 140 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது.
கடந்த 2 மாதமாக பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம் விலை போட்டிப்போட்டு உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் மழை தொடர்வதால் அறுவடைக்குத் தயாராக இருந்த சின்ன வெங்காயம் செடிகளிலே அழுகி வருகின்றன. அதனால், சின்ன வெங்காயம் விலையும் தமிழகத்தில் உயர்ந்து வருகுிறது.
பொதுவாக மழைக்காலங்களில் வெங்காயம் விலை ஏற்றம் பெறுவது வழக்கம். ஆனால், இந்த அளவிற்கு வெங்காயம் தொடர்ந்து விலை ஏற்றம் பெற்றதில்லை.
இந்தநிலையில் வெங்காய விலை உயர்வை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்று போராட்டம் நடத்தினர். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ள மூத்த காங்கிரஸ் தலைவர் சிதம்பரமும் இந்த போராட்டத்தில் பங்கேற்றார்.
வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த தவறி மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் கோஷம் எழுப்பினர்.