

கர்நாடகாவில் பாஜக அரசின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகும், 15 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது. முதல் 2 மணிநேரத்தில் 6.6 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு எதிராக 14 காங்கிரஸ், 3 மஜத எம்எல்ஏக்கள் தங்கள்பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் பேரவைத் தலைவர் ரமேஷ்குமார் கட்சித்தாவல் தடைச்சட்டத்தின்கீழ் 17 எம்எல்ஏக்களையும் தகுதிநீக்கம் செய்தார். குமாரசாமி அரசு கவிழ்ந்த நிலையில், எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி அமைத்தது.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 பேரும் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தகுதி நீக்கம் செல்லும் எனவும், அவர்கள் தேர்தலில் போட்டியிட அனுமதியும் அளித்தது. மஸ்கி, ராஜராஜேஸ்வரிநகர் ஆகிய இரு தொகுதிகளின் தேர்தல் முடிவு தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால், அவை நீங்கலாக மற்ற 15 தொகுதிகளுக்கு வரும் டிசம்பர் 5-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
கடந்த மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட காங்கிரஸ், மஜத இந்த இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடுகின்றன. இதனால் சிவாஜிநகர், கே.ஆர்.புரம், யஷ்வந்த்பூர், கோகாக் உள்ளிட்ட 15 தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. 15 தொகுதிகளிலும் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது. முதல் 2 மணிநேரத்தில் 6.6 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
இந்த தேர்தலில் ஆளும் பாஜகவும், எதிர்க்கட்சியான காங்கிரஸூம் 15 தொகுதிகளிலும் நேருக்கு நேர் மோதும் நிலையில், மஜத 14 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
தற்போதைய கர்நாடக சட்டப்பேரவையில் பாஜகவுக்கு 105, காங்கிரஸுக்கு 66, மஜதவுக்கு 34, பகுஜன் சமாஜ் கட்சி 1, சுயேச்சை (பாஜக ஆதரவு) 1 உறுப்பினர்கள் உள்ளனர். தனிப்பெரும்பான்மையை நிரூபிக்க 113 உறுப்பினர்கள் தேவைப்படும் நிலையில், 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. தேர்தல் முடிவின்போது கர்நாடக சட்டப்பேரவையின் பலம் 222 ஆக உயரும் நிலையில் பெரும்பான்மையை பெற 112 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
தற்போது 105 இடங்களைக் கொண்டுள்ள பாஜக ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள 7 இடங்களில் கட்டாயம் வெற்றிபெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே எடியூரப்பா தனது பதவியை காப்பாற்றிக் கொள்ளும் வாழ்வா சாவா போராட்டம் என்பதால் இந்த தேர்தலில் தீவிரப் பிரசாரம் செய்தது.
பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கான வாய்ப்பு என்பதால் இடைத்தேர்தலில் வெற்றி பெறும் முனைப்புடன் காங்கிரஸ் தேர்தல் பணியாற்றியது.